×

பறக்கும்படை சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல்

கோபி, ஏப்.2: கோபி அருகே உள்ள தொட்டிபாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் காரில் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 140 பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபி சட்டமன்ற தொகுதியில் ஜேக்கப் ஆபிரஹாம், சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் பெண் தலைமை காவலர் உதயகுமாரி, காவலர்கள் கிருஷ்ணகுமார், கார்த்திகேயன் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் கோபி அருகே உள்ள தொட்டிபாளையம் பிரிவு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 140 இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கோபியை சேர்ந்த மோகன்குமார் என்பதும், அத்தாணியில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருவதும் தெரிய வந்தது. இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்கில் விற்பனையான தொகையை வங்கியில் செலுத்த கொண்டு சென்ற போது பறக்கும் படையினரிடம் பிடிபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கோபியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

The post பறக்கும்படை சோதனையில் ரூ.2.25 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Tankipalayam ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு