×

குஜராத்தில் 5 மக்களவை தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

அகமதாபாத்: குஜராத்தில் 5 மக்களவை தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அந்த கட்சியின் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 மக்களவை தேர்தலில்,மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதே போன்ற வெற்றியை நிகழ்த்த பாஜ தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த மாநிலத்தில் மே 7ல் தேர்தல் ஒரே கட்ட தேர்தல் நடக்க உள்ள நிலையில், 5 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களுக்கு எதிராக சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருவது கட்சி தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அம்ரேலி, ராஜ்கோட், சபர்கந்தா,சுரேந்திரநகர், வதோதரா ஆகிய தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் பர்சோத்தம் ருபாலா,ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக , ராஜபுத்திர அரசர்கள் செயல்பட்டனர் என்று தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சுக்கு ஷத்திரியா பிரிவின் தலைவர் ராஜ் செகாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தலில் டிக்கெட் வழங்குவதில் ஷத்திரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசிய அமைச்சர் ருபாலா மீது பாஜ நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ருபாலாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ஷத்திரிய வகுப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.

அம்ரேலி தொகுதியில்,தற்போதைய எம்பி நாராண் கச்சாடியாவை மாற்றி விட்டு பரத் சுட்டாரியா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு கச்சாடியா எதிர்ப்பு தெரிவித்தார். இது சம்மந்தமான பிரச்னையை தீர்க்க மாநில அமைச்சர் பூபேந்திர சுதாசமா முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கச்சாடியாவின் ஆதரவாளர்களுக்கும், அம்ரேலி எம்எல்ஏ கவுசிக் வெக்காரியாவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். பிரதமர் மோடி 2014ல் வெற்றி பெற்ற வதோதரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சனா பட் என்பவருக்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு பதிலாக ஹேமங் ஜோஷி தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்.சபர்கந்தா தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மகேநாதிர சிங் பரையா என்பவர் மனைவி ஷோபனாவுக்கு பாஜ சீட் கொடுத்துள்ளது. அவருக்கு டிக்கெட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மொடாசா நகர பாஜ பிரமுகர் பிகாஜி தாக்குர் தலைமையில் கட்சி அலுவலகத்துக்கு முன் போராட்டம் நடந்தது. சுரேந்திரநகரில் தற்போதைய எம்பி மகேந்திர முஞ்ச்பாராவுக்கு பதில் முன்னாள் காங்கிரஸ்காரரான சந்து ஷிகோராவை பாஜ வேட்பாளராக்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த முறை குஜராத்தில் பாஜ சறுக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post குஜராத்தில் 5 மக்களவை தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,5 Lok Sabha ,Gujarat ,AHMEDABAD ,Lok Sabha ,5 ,
× RELATED நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட...