சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் வெயில் காலத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கை: வெயில் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் காரணத்தால் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே பொது சுகாதாரத்துறை பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து மருத்துவமனைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, மருத்துவமனைகளில் இருக்கும் தீ பாதுகாப்புக் கருவி முறையாக செயல்படுகிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். மின்சாரம் தொடர்பான கணக்கீடு எடுக்க வேண்டும். மருத்துவமனை அமைந்து இருக்கும் பகுதியில் உள்ள தீயணைப்பு துறையிடம், மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது என என்ஓசி (NOC) பெற வேண்டும். மருத்துவனையில்ஆக்சிஜன் இருக்கக்கூடிய இடத்தை முறையாக பாதுகாக்க வேண்டும். அவசர காலத்தில் மருத்துவ பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்திருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது நோயாளிகள் மற்றும் பணியாளர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து திட்ட வரைபடத்தை மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
The post வெயில் காலத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு; மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.