×

ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான ஜேஇஇ 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு வரும் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களாக அறியப்படுகின்றன. இங்கு கற்பிக்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. 2024க்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜனவரி 24ம் தேதி தொடங்கின.

ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.இந்நிலையில், ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுகள் வரும் 4 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்.3ல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகிறது.

குறிப்பாக வரும் 4, 5, 6, 8, 9 தேதிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான முதல் தாள் நடக்கிறது. ஏப்ரல் 12ம் தேதி, பி.ஆர்க்., பி.பிளானிங். படிப்புகளுக்குத் தனித்தனியாகவும் ஒரே தேர்வாகவும் மெயின் தேர்வு நடைபெறுகிறது. இவற்றில் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்காக ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 8,9 மற்றும் 12ம் தேதி தேர்வு எழுதவிருக்கும் தேர்வர்களுக்கு பின்னர் வெளியிடப்படும் என என்.டி.ஏ அறிவித்துள்ளது. தேர்வர்கள் jeemain.nta.ac.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, https://jeemain.nta.nic.in/ மற்றும் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

The post ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Examinations Agency ,Dinakaran ,
× RELATED யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு..!!