×
Saravana Stores

மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை முடித்தது ஏன்? போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மனித உரிமை ஆணையம் தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை முடித்தது ஏன் என்பதற்கு, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பொய் புகார்கள் அளிக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022ல் உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த ஆணையம், இருவரின் புகாரையும் முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை ஒத்திவைக்க கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ஒவ்வொரு முறையும் வழக்கை தள்ளிவைக்குமாறு ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதில் இன்னும் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. காவல்துறையின் அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து, நீதிபதிகள், காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஜெயக்குமார் மற்றும் ஜெயவர்தன் அளித்த புகார்களை முடித்து வைத்தது ஏன்?. காவல் துறை அறிக்கை மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், உரிய காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும் என்றனர். அதற்கு ஆணைய தரப்பு வழக்கறிஞர், ஜெயக்குமாருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக பொய் புகார்கள் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு தள்ளிவைத்தனர்.

The post மாஜி அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை முடித்தது ஏன்? போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மனித உரிமை ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : minister ,Jayakumar ,Human Rights Commission ,ICourt ,CHENNAI ,State Human Rights Commission ,High Court ,DMK ,Dinakaran ,
× RELATED மனித உரிமை ஆணையத் தலைவர்...