×

ஏப். 1 முதல் அமல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்: தேர்தல் முடிவு வெளியான நள்ளிரவில் அமலுக்கு வரும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தையே வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்டது. தேர்தலுக்காக நிறுத்தப்பட்டுள்ள கட்டண உயர்வு, தேர்தல் முடிவுகள் வெளியான நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நமது நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்கவும், எளிமையாகச் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காகவும் சுங்கச் சாலைகள் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக சரக்கு போக்குவரத்தில் இந்த சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல உதவுகிறது. இந்த சாலைகளில் பயணிக்கத் தனியாகச் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.

சாலை வரியை அனைவரும் செலுத்தும் போது ஏன் தனியாகச் சுங்க கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாகச் சுங்கச்சாவடிகள் இருப்பதாக மக்கள் நீண்ட காலமாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். திமுக உள்ளிட்ட கட்சிகள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சுங்கச்சாவடிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இந்த ஏப்ரல் 1ம் தேதி (நேற்று) முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 5 முதல் 10 சதவீதம் வரை இந்த கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 49 சுங்கச்சாவடிகளில் முதலில் 5 சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதைதொடர்ந்து பரனூர், ஆத்தூர் என மொத்தம் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்ப வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்படும். இந்த கட்டண உயர்வில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில், ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டிருந்தது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரையிலும், உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் ரூ.10 வரை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு வாகன ஓட்டுநர்கள், லாரிகள் உரிமையாளர் சங்கம் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும் கட்டண உயர்வுக்கு, வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை சுங்கச்சாவடிகளில் சென்ற வாகனங்களிடம் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஆச்சரியமடைந்தனர். இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்ட போது, ‘புதிய கட்டணம் அமல்படுத்தப்படுவது தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தனர். நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், சுங்கக் கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான அன்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ளது. இதனால் கட்டண உயர்வு குறித்த நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள முடியாது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த அன்று (ஜூன் 4) நள்ளிரவு முதல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வரும்’’ என்றனர்.

The post ஏப். 1 முதல் அமல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திடீர் நிறுத்தம்: தேர்தல் முடிவு வெளியான நள்ளிரவில் அமலுக்கு வரும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...