×

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட ஸ்ரீபெரும்புதூர் மக்களவையில் வாகை சூடப்போவது யார்?

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி. இது, தமிழ்நாட்டின் மிகப்பெரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2008ல் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு வரை, இந்த தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பின்னர் பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியை தவிர, மற்ற ஐந்துமே புதிய சட்டமன்ற தொகுதிகள்தான். அதாவது, மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பெரும்புதூர், பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. முன்பு தனி தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர், தற்போது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 32 பொது தொகுதிகளில் பெரும்புதூரும் ஒன்றானது. பல்லவர்கள் ஆண்ட பகுதி என்ற சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தொகுதியில் தான், தமிழகத்திலேயே அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களும், 1000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, ஆட்டோமொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது. அனைத்து சமுதாய பிரிவினரையும் கணிசமாக கொண்ட தொகுதியாகும். பெரும்புதூர் தொகுதியின் முக்கிய பிரச்னை, இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என்பதுதான். மேலும், சென்னை புறநகர் பகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இந்த தொகுதியை மையப்படுத்தி பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கையாக தொடர்கிறது. இதுதவிர, அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தொழில் நகரமான பெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இங்குள்ள மக்கள் முன்வைக்கின்றனர்.

இத்தொகுதியில் 1967ம் ஆண்டு சிவசங்கரன் (திமுக), 1971-ல் டி.எஸ்.லட்சுமணன் (திமுக), 1977-ல் சீராளன் ஜெகநாதன் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். அதேபோல், 1980ல் நடந்த தேர்தலில் நாகரத்தினம் (திமுக), 1984 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மரகதம் சந்திரசேகர், 1989 மற்றும் 1991 தேர்தலில் மீண்டும் மரகதம் சந்திரசேகரே வெற்றி பெற்றார். 1996ல் திமுகவை சார்ந்த நாகரத்தினமும், 1998ல் அதிமுகவை சேர்ந்த வேணுகோபாலும் இந்த தொகுதியை கைப்பற்றினர். இதனையடுத்து, 1999 மற்றும் 2004ம் ஆண்டு திமுக சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2009 மற்றும் 2019ம் ஆண்டு டி.ஆர்.பாலுவும், 2014ம் ஆண்டு ராமசந்திரனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் பிரவீன் குமார், பாஜவின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்த தொகுதியில் மக்களின் அடிப்படை சார்ந்த பல பிரச்னைகளும், அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் போட்டியிடும் வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதியை மையப்படுத்தியே வெற்றி என்னும் இலக்கை எட்டமுடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

The post தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட ஸ்ரீபெரும்புதூர் மக்களவையில் வாகை சூடப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur Lok Sabha ,Tamil Nadu ,Sriperumbudur ,Sabha ,Kummidipoondi ,Ponneri ,Poontamalli ,Thiruvallur ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...