×
Saravana Stores

குளச்சல் கடல் பகுதியில் காற்று; கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை: ஒரு வள்ளத்தில் 400 கிலோ ராட்சத திருக்கை மீன் சிக்கியது

குளச்சல்: குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் சீராக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்து உள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும்.ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம்,கட்டுமர மீனவர்கள் சாளை,நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கடந்த வாரம் கரை திரும்பியது.கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் முடிந்து நேற்றிரவு முதல் விசைப்படகுகள் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் நேற்று குளச்சல் கடல் பகுதியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதனால் விசைப்படகுகள் நேற்றும்,இன்று காலையும் மீன் பிடிக்க செல்லவில்லை.இன்று (திங்கள்கிழமை)குளச்சல் உள் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காற்றும் வீசுவதால் பைபர் வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை. ஒரு சில வள்ளங்களே கடலுக்கு சென்றன.இதில் மீன்கள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு வள்ளத்தில் ராட்சத கொம்பன் திருக்கை மீன் பிடிப்பட்டது. இதனை மீனவர்கள் மீன் ஏலக்கூடத்தில் கரை சேர்த்து விற்பனை செய்தனர். இந்த கொம்பன் திருக்கை மீன் சுமார் 400 கிலோ எடையிருந்தது. இது ₹.20ஆயிரத்து 900 க்கு விலை போனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். ஈஸ்டர் பண்டிகை முடிந்தூ இன்று காற்று காரணமாக வள்ளங்கள் கடலுக்கு செல்லாததால் குளச்சலில் இன்று மீண்டும் மீன் வரத்து குறைந்தது.

The post குளச்சல் கடல் பகுதியில் காற்று; கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை: ஒரு வள்ளத்தில் 400 கிலோ ராட்சத திருக்கை மீன் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Khulachal ,
× RELATED குளச்சல் 3 வது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மர்