×

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும், பின்பும் நடந்த தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் தில்லுமுல்லு..? ஆர்டிஐ மனுவில் வெளியான பகீர் தகவல்கள்

புதுடெல்லி: கடந்த 2018 மார்ச் முதல் 2024 பிப்ரவரி வரை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் நடந்த தில்லுமுல்லு குறித்த தகவல்கள் ஆர்டிஐ மனுவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ எனக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்பிஐ வங்கிக்கு அதிரடி உத்தரவு போட்டது. அதன்படி, எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து மொத்தமாக 22,217 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக மட்டும் ரூ.8,451 கோடியும், காங்கிரஸ் ரூ.1,950 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,707.81 கோடியும், பி.ஆர்.எஸ் ரூ.1,407.30 கோடியும் பணமாக்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அரசின் நிறுவனமான இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் மூலம் தலா 1 கோடி ரூபாய் மதிப்பிலான 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த 15 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28ம் தேதியன்று, நிதி அமைச்சகம் எஸ்பிஐ வங்கியிடம் பத்திரங்களை அச்சிடுவதை உடனடியாக நிறுத்தும்படி கூறியுள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) பெறப்பட்ட தகவலின்படி, இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி 8,350 பத்திரங்களை அச்சடித்து எஸ்பிஐ-க்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

எஸ்பிஐ-யின் பரிவர்த்தனை வங்கித் துறையின் உதவி பொது மேலாளரின் பதிலில், ‘23.02.2024 தேதியிட்ட மொத்தம் 8,350 பத்திரங்கள் கொண்ட மின்னஞ்சலைக் கொண்ட தேர்தல் பத்திரங்களின் 4 பெட்டிகளின் பாதுகாப்புப் படிவங்களின் ரசீதை ஒப்புக்கொண்டோம். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 12.02.2024 தேதியிட்ட பட்ஜெட் பிரிவு கடிதத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு குறிப்பில், 400 கையேடுகள் மற்றும் 10,000 தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவதற்கான ஆர்டர் இருந்தது என்றும், அதற்கான ஒப்புதல் பிப்ரவரி 12 அன்று வழங்கப்பட்டது என்றும் பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவில் இருந்து எஸ்பிஐ மற்றும் நிதி அமைச்சகத்தில் உள்ள மற்றவர்களுக்கு மற்றொரு கடிதம் வந்துள்ளது. அதில், ‘மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதை நிறுத்தி வைக்க இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்ட 10,000 தேர்தல் பத்திரங்களில் 8,350 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்கள் அதே நாளில் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திர ஆர்டர், டெலிவரி, தடை
தேர்தல் பத்திரம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட தேதி: 15.02.2024
தீர்ப்பு வெளியாகும் முன் ரூ. 1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரம் ஆர்டர் கொடுத்த தேதி: 12.02.2024
8,350 தேர்தல் பத்திரங்களின் எஸ்பிஐ-க்கு டெலிவரி செய்யப்பட்ட தேதி: 21.02.2024
8,350 தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ பெற்றுக் கொண்ட தேதி: 23.02.2024
தேர்தல் பத்திரத்தை தொடர்ந்து அச்சடிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்த தேதி: 28.02.2024
மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க வேண்டாம் என்று கூறும் கடிதத்தின் தேதி: 12.02.2024

மவுனம் கலைத்த மோடி
பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தால், ஒன்றிய பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்படாது. நாங்கள் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும். தேர்தல் பத்திரத் திட்டத்தினால்தான் நன்கொடை அளித்தவர்களின் ஆதாரங்களையும், அதன் பயனாளிகளையும் (கட்சிகள்) கண்டுபிடிக்க முடிந்தது. இன்று தகவல் கிடைத்ததற்கு தேர்தல் பத்திரங்கள் தான் காரணம். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை நீக்க முயற்சிக்க வேண்டும். எந்தவொரு அமைப்பும் முற்றிலும் சரியானதாக இருக்காது. எல்லா வகை திட்டங்களிலும் அரசியல் பார்க்கக் கூடாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே நான் செயல்படுகிறேன் என்று கூறுவது சரியாக இருக்காது’ என்று கூறினார். தேர்தல் பத்திரம் குறித்து கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து வந்த மோடி, தற்போது தேர்தல் பத்திர விபரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், அதன் விபரங்களை வெளியிட்ட நிலையில், அதற்கு முன் தேர்தல் பத்திரம் வெளிப்படைத் தன்மை அற்றதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும், பின்பும் நடந்த தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் தில்லுமுல்லு..? ஆர்டிஐ மனுவில் வெளியான பகீர் தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Dillumulu ,Supreme Court ,Bakeer ,RDI ,New Delhi ,RTI ,Bakir ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு