×

சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக விவசாய நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்: தேர்தல் புறக்கணிக்க முடிவு?

திருவொற்றியூர்: சென்னை மணலி அருகே மாத்தூரில் சுமார் 200 குடும்பங்களின் 400 ஏக்கர் விவசாய நிலங்களை கடந்த 1992ம் ஆண்டு மணலியில் உள்ள ஒன்றிய அரசின் நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவன விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் ஆரோ மெட்ரிக் என்ற உரத் தொழிற்சாலை உருவாக்க திட்டமிடப்பட்டது. விவசாய நிலங்களை இழந்த உரிமையாளர்களுக்கு சிறிய தொகையை மட்டும் நிறுவனம் சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் இது மிகவும் குறைவு என்று கூறிய நிலத்தை இழந்தவர்கள் சந்தை விலைக்கு ஏற்ப நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்றனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் முறையான இழப்பீடு வழங்கவில்லை. கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் நிறுவனத்திற்காக பயன்படுத்தாமல் வைத்துள்ளதால் தங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது தங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் திரும்ப வழங்க வேண்டும் எனக் கூறி நிலத்தின் உரிமையாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய்துறை அதிகாரி மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாதவரம் வட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்தனர். ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் நேற்று மாதவரம், மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் திரண்டனர். தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க போவதில்லை என்று கூறியபடி கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டினர்.

The post சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்காக விவசாய நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்: தேர்தல் புறக்கணிக்க முடிவு? appeared first on Dinakaran.

Tags : CPCL ,Thiruvotiyur ,Union Government Corporation ,Manali ,Mathur ,Manali, Chennai ,Dinakaran ,
× RELATED வண்ணாரப்பேட்டையில் மரச்சாமான்கள்...