×

மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள்

காப்பு கட்டுதல்

வருடந்தோறும் நடைபெறும் பெருவிழாவையொட்டி அது ஆரம்பிப்பதற்கு முன் இந்நிகழ்ச்சி நடைபெறும். காப்பு கட்டுதல் என்றால் உறுதி எடுத்தல் என்று பெயர். எதற்கு உறுதி? கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, ஊரே திரண்டு வந்து அவ்விழாவில் பங்கு கொள்ளும், அவ்வாறு அதிக மக்கள் கூடும்பொழுது, சிற்சில அசம்பாவிதங்கள் நடைபெறலாம். திருக்கோயிலில் நடைபெறும் திருவிழா எந்தவொரு தடங்கலும் இல்லாமல், எல்லா மக்களும் பக்தி உணர்வுடன் அதில் ஈடுபட்டு நல்ல முறையில் நிறைவடைய வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொள்வதே காப்பு கட்டுதல் என்ற நிகழ்ச்சியாகும். இந்த காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில், மஞ்சள் நூலையோ அல்லது மஞ்சள் சேர்த்து கட்டப்பட்ட நூலையோ மாரியம்மன் முன் வைத்து ஆராதனைகள் செய்துவிட்டு, முதலில் ஒரு நூலை அம்மன் கையில் கட்டுவர். பின்னர் பரிவார தேவதைகளுக்கும் கட்டுவர். பின்னர் பூசாரி தன் கையில் கட்டிக் கொள்வார். விழாவில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் கட்டிக்கொள்வர்.

காப்பு கட்டிவிட்டால், பின்னர் அந்த ஊரிலிருந்து எவரும் வெளியில் செல்ல மாட்டார்கள். அவ்வாறு அவசரமாக செல்ல நேர்ந்தால், வெளியிடங்களில் இரவில் தங்காமல் உடனே திரும்பிவிடுவர். அதே போல், காப்பு கட்டிவிட்டால் அவ்வூருக்குச் செல்லும் எவரும் அவ்வூரில் இரவு தங்க மாட்டார்கள். பெரும்பாலும் அவ்வூருக்குச் செல்வதை தவிர்ப்பர். இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. இத்தகைய விழாக்களில் முன் காலத்தில் அவ்வூர் மக்கள் மட்டுமே பங்கேற்பர். ஊர்க்கட்டுப்பாடு என்ற முறையில் தங்களுக்குள் பணம் வசூல் செய்து விழாவை நடத்துவர். விழாக் காலங்களில் பெரும் கூட்டம் கூடும்பொழுது வேற்று ஊர்களிலிருந்து மனிதர்கள் வரும் தருணத்தில் அவர்கள் மூலம் தொற்று நோய்கள் பரவலாம். இதனால், அந்த கிராமத்தின் நிம்மதி குலையும். இதனைக் கருத்தில் கொண்டே ‘‘காப்பு கட்டுதல்’’ நிகழ்ச்சி, விழா துவங்கும் முன் நடைபெறுகிறது. காப்பு கட்டும் நிகழ்ச்சி நிறைவுற்றதிலிருந்து திருவிழாவிற்கான அடுத்தடுத்த வேலைகள் அடுத்தடுத்து நடைபெறும்.

கொடியேற்றுதல்

திருக்கோயிலில் திருவிழா துவங்கிவிட்டதை எல்லோருக்கும் அறிவிக்கும் நிகழ்ச்சியே கொடியேற்றுதலாகும். பொதுவாக கொடியானது மஞ்சள் துணியில் தயாரிக்கப்படும். கொடியேற்ற நாளன்று புதிய கொடிக்கம்பம் கொண்டு வந்து அதை சுத்தப்படுத்தி மஞ்சள் குங்குமம் சந்தனம் இட்டு, வேப்பிலையால் அலங்கரித்து அதன் மேல் நுனியில் கொடியைக்கட்டி விடுவர். பின்னர் அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு, கொடிக்கம்பத்தை குழி தோண்டி அதில் நடுவர். கொடிக்கம்பம் சுமார் 60 அடி வரைகூட இருக்கும். சில கோயில்களில் நிலையான கொடிமரம் இருக்கும். காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவில் தினமும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும் இடம் பெறும்.

மாலை வேளைகளில் கலை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும்கூட இடம் பெறும். தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவதுண்டு. சில ஊர்களில் பல கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே அம்மன் இருக்கும். அவ்வாறாயின், அம்மன் அந்த விழா காலத்தில் தனக்குட்பட்ட எல்லா ஊர்களுக்கும் சென்று திரும்புவார். இவ்வாறு பல நாட்கள் நடைபெறும் பெருவிழாவின் முடிவு நாளன்று கூழ் காய்ச்சி ஊற்றுதல் தீமிதி போன்ற விழாக்களும் நடைபெறும்.

மாவிளக்கு போடுதல்

ரேணுகாதேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன் அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் துளிமாவு என்கிற வெல்லம் நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள். மாவிளக்கு செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் வெல்ல சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர் அதன் மத்தியில் குழிவாக செய்து, அக்குழியில் நெய்விட்டு பஞ்ச திரியிட்டு அதன் நான்கு புறமும் சந்தனம் குங்குமமிட்டு, மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர். இந்த விளக்குகளை 2,4,6 என்றபடி தயார்செய்து அன்னையின் திருச்சந்நதியில் ஓரிடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழையிலை போட்டு தேவியை மனதில் தியானித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி தீபவிளக்குளை ஏற்றுவர்.

பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு நிவேதனப் பொருட்களை வைத்து திருவிளக்குகளுக்கு நிவேதனம் செய்வர். தீபம் மலையேறும் வரை அன்னையின் சந்நதியில் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவர். பின்னர் அன்னைக்கு கற்பூர ஆரத்தி செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்வர். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச்சந்நதியில் படுத்துக் கொண்டு தங்களின் வயிற்றுப் பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வதுமுண்டு. சிலர் மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் திருச்சந்நதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர். தீபம் மலையேறியதும் மாவிளக்குகளை ஒன்றாகச்சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள்புரிவாள்.

பொங்கலிடுதல்

பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில் களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும். திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடுவதும் உண்டு. சில கோயில்களில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1 முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர். பொங்கலிடும் போது பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள் சந்தனம் குங்குமமிட்டு வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர்.

பெரும்பாலும் சர்க்கரை பொங்கலே பிதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தாயாரானதும் அதனைப்பெரிய வாழை இலையில் வைத்து அதனுடன் பலவகைப்பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து படையலை நிறைவு செய்வர். பின்னர் அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.

பால்குடம்

பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறோம். நம்முடைய சிரசில் பால் குடத்தை வைத்தவுடன் நம் எண்ணங்கள் நம் கபாலம் வழியாக பால் குடத்தின் உள்ளே செல்லும். பின் அந்தப் பாலை தெய்வத்திற்கு அபிஷேகம் செய்தால் நம் எண்ணங்கள், வேண்டுதல்கள் பால் மூலம் தெய்வத்தை சென்றடையும். இதன் மூலம் தெய்வம் நம் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றுகிறது. பால் குடம் எடுத்து நம் பக்தியை வெளிப்படுத்துவது மிகச் சிறந்த வழிபாடாகும்.

அக்னி சட்டி / பூவோடு

மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும். மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் பரவலாக எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதனையே தீசட்டி எடுத்தல் பூவோடு எடுத்தல் என்றும் அழைப்பர். தீச்சட்டி எடுப்பவர் விரதமிருந்து அம்மன் கோயிலிலோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளிலோ ஸ்நானம் செய்து, மஞ்சளாடை உடுத்தி, வேப்பிலையை இடுப்பில் சொருகிக் கொண்டு அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு தயாராக வைத்திருக்கும், தீச்சட்டியை கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு அதற்கு மேல் வைப்பர். தீச்சட்டியானது பக்கவாட்டில் மூன்று துளைகளுடன் இருக்கும் அதன் அடியில் மணல் நிரப்பி, அதில் காய்ந்த மரக்குச்சிகளை இட்டு நெய் ஊற்றி கற்பூரம் ஏற்றி தீயை உண்டாக்குவர். பின்னர் அதனை சுற்றி வறட்டியை அடுக்கி தீயை வளர்ப்பர்.

தீச்சட்டி எடுப்பவர் கையில் தீச்சட்டியுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் வீதிவழியாக எல்லோர் வீடுகளுக்கும் செல்வர். அவரை அம்மனாகக் கருதி அவரது பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் காட்டி வழிபடுவர். இறுதியில் மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மன் முன் தீச்சட்டியை வைத்துவிட்டு அம்மனை கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர்.

இவ்வாறு தீச்சட்டி எடுப்பது விழாக்காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அம்மனுக்கு நேர்ந்துகொண்டு செய்வதுண்டு. பக்தனுக்கு நெருப்பு, அனலாகத் தெரிவதில்லை. பூவாக குளிர்கிறது. அதனாலேயே இதனை பூவோடு எடுத்தல் என்று கூறுகிறார்கள். இப்படி பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயன் நீங்குகிறது. விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம், இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் உபத்திரவங்கள் நீங்குகின்றன.

கரகம் எடுத்தல்

மாரியம்மன் வழிபாட்டில் இடம் பெறும் மற்றொரு அம்சம் கரகம். கரகம் எடுக்கும் நாளன்று மேளதாளத்துடன் அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளுக்கோ அல்லது பொதுவாக ஒரு இடத்திற்கோ சென்று அங்கிருந்து கரகம் எடுத்து வருவர். கரகம் எடுப்பதற்கு ஒரு புதுப்பானையை வாங்கி அதனுள் பச்சரிசி, நீர் சேர்த்து அப்பானைக்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் இட்டு, வேப்பிலை சாற்றி, பூக்களால் அலங்கரித்து கும்பத்தின் மீது தர்ப்பை கூர்ச்சம், மாவிலை தேங்காய் வைத்து உச்சியில் எலுமிச்சம்பழம் வைத்து கும்பம் போல் ஜோடிப்பர். பிறகு இக்கரகத்தை அம்மனாக எண்ணி பூஜை செய்து கற்பூரம் ஏற்றி வணங்குவர். பின்னர் காப்பு கட்டியவர்கள் அம்மனை மனதில் தியானித்து தங்கள் தலையில் கரகத்தைக்தூக்கி வைத்துக் கொண்டு மேளதாளத்துடன் தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடிக் கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு வந்து கருவறையில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுவர். இதுவே கரகம் எடுத்தல் ஆகும்.

எலுமிச்சை மாலை

எலுமிச்சை மாலையின் மகத்துவம் என்ன? தெய்வ வழிபாட்டில் எலுமிச்சை கனி மாலை சார்த்தி வழிபடுவது வழக்கம். கனிமாலை என்றாலே அது எலுமிச்சை மாலைதான். துர்க்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் ஆகிய தெய்வங்களை பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சார்த்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் முன் ஒரே அளவிலான பழங்களை கோர்த்து (காயும் கூடாது, மிகவும் கனிந்தும் இருக்கக் கூடாது) 108,54,45,18 என்ற எண்ணிக்கையில் சாற்றுவார்கள். உக்ரமான தெய்வங்களுக்கு கனி மாலை சார்த்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். நீண்ட நாள் தடைப்பட்ட செயல்கள் கனிமாலை சார்த்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேர் / சப்பரம் இழுத்தல்

மாரியம்மன் கோயில் திருவிழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் பெரும்பாலும் தேர்த்திருவிழா நடைபெறும். சில இடங்களில் தேர் இழுத்துச் செல்லும் போது கூடவே சப்பரமும் இழுத்துச் செல்லப்படும். தேர்த்திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பிருந்தே தேரைப் பழுது பார்த்து வர்ணம் பூசி, மராமத்து வேலைகள் செய்து சரி செய்து வைப்பர். தேர்த்திருவிழா நாளன்று தேரினை அல்லது சப்பரத்தை பூவினால் அலங்கரித்து அதில் அம்மனின் உற்சவ விக்கிரகத்தை வைத்து வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இது பெரும்பாலும் அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வரும். அவ்வாறு வரும்போது சில குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி அங்குள்ள மக்களின் பூஜையை ஏற்று பின் தொடரும். இந்த தேரோட்டம் கோயில் திருவிழாவின் போது ஆண்டிற்கொரு முறை மட்டுமே நடைபெறும். பின்னர் அந்த தேர் / சப்பரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விடும்.

படையல் எடுத்தல் மாரியம்மனுக்கு முன் தலைவாழை இலை போட்டு அதில் நிவேதனங்களாக பொங்கல், சாதம் போன்றவற்றுடன் வெற்றிலை, பாக்கு, பழவகைகள், தேங்காய், இளநீர், பானகம், நீர்மோர், இனிப்பு பட்சணங்கள் போன்ற எல்லா பதார்த்தங்களையும் வைத்து மாரியம்மனுக்கு நிவேதனம் செய்வர். அச்சமயத்தில் மாவிளக்குகள் ஏற்றுவதும் உண்டு. இதன் முடிவில் பெரிய தீபாராதனை நடைபெறும். பின்னர் நிவேதன பதார்த்தங்களை பக்தர்கள் எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் appeared first on Dinakaran.

Tags : MARYAMMAN ,
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா