×

போதைப்பொருள் அதிகம் சிக்கும் டாப் 10 மாநில பட்டியலில், 7 மாநிலங்களில் பாஜக ஆட்சி.. தமிழ்நாடு இல்லவே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: போதைப்பொருள் அதிகம் சிக்கும் டாப் 10 மாநில பட்டியலில், 7 மாநிலங்களில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. இந்த டாப் 10 பட்டியலில் தமிழ்நாடு இல்லவே இல்லை என்று சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார் மோடி. இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.

இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள். ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது? இது பற்றியாவது வாய் திறப்பீர்களா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது… அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை. மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் மத்திய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது. அதுமட்டுமில்லை. போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது.

இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை. அந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது.பிரதமர் மோடி அவர்களே, உங்கள் ஆட்சி அறிக்கையிலேயே இல்லாத தமிழ்நாட்டைப் பற்றி அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே, உங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மேல் அப்படி என்ன கோபம்? இது மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும் – எங்கள் இளைஞர்களையும் ஏன் அவதூறு செய்கிறீர்கள்?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

The post போதைப்பொருள் அதிகம் சிக்கும் டாப் 10 மாநில பட்டியலில், 7 மாநிலங்களில் பாஜக ஆட்சி.. தமிழ்நாடு இல்லவே இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Salem ,M. K. Stalin ,Pethanayakkanpalayam, Salem district ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...