×

உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும்

ஐதராபாத்: ‘அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறி உள்ளார். ஒன்றிய பாஜ அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அம்மாநில அரசுகளுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

அரசியலமைப்பு எதிராக செயல்படுவதா, சட்டம் தெரியாதா என கேள்வி எழுப்பி, 24 மணி நேர கெடு விதித்தது. அதன் பிறகே ஆளுநர் ரவி, பொன்முடியை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நல்சார் சட்டப்பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பங்கேற்று பேசியதாவது: சமீப காலமாக மாநில ஆளுநர்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலிருப்பது, அரசியல் விவகாரங்களில் தலையிடுவது மற்றும் பிற நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்ற வழக்குகளுக்கு ஆளாகின்றனர்.

இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு பதவி. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் இது போன்ற வழக்குகள் குறையும். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்கள் தங்கள் கடமைகளை செய்யவேண்டும் என்று சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றிய பாஜ அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் 4:1 தீர்ப்பின் அடிப்படையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியானதே என்றே தீர்ப்பளித்தது. இதில் 5 நீதிபதிகளில், `பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது’ என மாறுபட்ட தீர்ப்பளித்த ஒரே நீதிபதி பி.வி.நாகரத்னா. இவரே, பில்கிஸ் பானு வழக்கில் குஜராத்தின் பாஜ அரசால் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கினர்
கருத்தரங்கில் பணமதிப்பிழப்பு குறித்து பேசிய நீதிபதி பி.வி.நாகரத்னா, “2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 86 சதவீதம் இருந்தன. தடை செய்யப்பட்ட பிறகு அவற்றில் 98 சதவீத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டதாக அரசு கூறியது. அப்படியென்றால், கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கான சிறந்த வழி பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றே நான் நினைத்தேன். பணமதிப்பிழப்புக்குப் பின் வருமான நடவடிக்கைகள் என்ன ஆனது என தெரியவில்லை. ஆனால், அந்த சமயத்தில் சாமானிய மக்கள் சந்தித்த கஷ்டங்கள் தான் என்னை மாற்று தீர்ப்பை எழுத வைத்தது’’ என்றார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Hyderabad ,Justice ,P. V. Nagaratna ,Union State of Bahia ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...