×

தேர்தல் அறிக்கை தயாரிக்க மறந்த பாஜ: கடைசி நேரத்தில் குழு அமைத்ததால் காங்கிரஸ் கிண்டல்

புதுடெல்லி: தேர்தல் அறிக்கையை தயாரிக்க மறந்துபோன பாஜ கடைசி நேரத்தில் அதை தயாரிக்க குழு அமைத்துள்ளதாக காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. மக்களவைக்கோ, மாநில சட்டப்பேரவைக்கோ தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார வியூகம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று மும்முரமாகிவிடுவது வழக்கம். தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப் போகும் திட்டங்கள் என்னென்ன? என்பதை அரசியல் கட்சிகள் அறிவிக்கும்.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்பதால், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை முன்கூட்டியே தொடங்கிவிட்டன. பல கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுவிட்டன. காங்கிரசும் தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து வரும் 5ம் தேதி வெளியிட உள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜ கட்சி நேற்றுமுன்தினம் தான் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையே அமைத்துள்ளது.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழு இனிமேல் தான் தேர்தல் அறிக்கையையே தயாரிக்க உள்ளது. அதை தயாரித்து வெளியிடுவதற்குள் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்குப்பதிவே நடந்து முடிந்துவிடும்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், காங்கிரஸ் தனது 5 உத்தரவாதங்களை மார்ச் 16ம் தேதியே அறிவித்தது. நாடு முழுவதும் பல்லாயிரம் பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். அதை வரும் 5ம் தேதி வெளியிட உள்ளோம். ஆனால், பாஜவோ தேர்தல் அறிக்கை என்று ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டது. கடைசி நேரத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையே அமைத்துள்ளனர். மக்களை எந்த அளவுக்கு பாஜ மதிக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

The post தேர்தல் அறிக்கை தயாரிக்க மறந்த பாஜ: கடைசி நேரத்தில் குழு அமைத்ததால் காங்கிரஸ் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,New Delhi ,Lok Sabha ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...