×

மன்னருக்கும் சாமானியருக்கும் இடையே மைசூருவில் போட்டி: பாஜவை வீழ்த்த சித்தராமையா தீவிரம்

மைசூரு: மக்களவை தேர்தலில் மைசூரு தொகுதி தேர்தல் மன்னருக்கும் சாதாரண மனிதருக்கும் இடையே நடக்கும் போட்டியாக கருதப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு இந்த மாதம் 26ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 7 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயன்று வருகிறது.

பாஜ வேட்பாளர் பட்டியலில், மைசூரு எம்பியாக இருந்த பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, மன்னர் குடும்பத்தை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் பாஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.லட்சுமணாவை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ்- பாஜ இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர் மைசூரு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியாகும். எனவே இந்த தொகுதி தேர்தலை மிகவும் கவுரவ பிரச்னையாக சித்தராமையா கருதுகிறார். கடந்த 24ம் தேதி மைசூரு வந்திருந்த சித்தராமையா 4 நாள்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பிரசார பணிகளை நேரில் கவனித்துள்ளார். அதே போல் கட்சி நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசனையும் நடத்தினார். மைசூரு தொகுதி தேர்தல் மன்னருக்கும் சாமானிய மனிதருக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது.

மைசூரு தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ளது. மைசூரு தொகுதியில் வெற்றி கனியை பறித்தே ஆக வேண்டும், அதற்காக கடுமையாக உழைக்கும்படி கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மைசூரு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 8 பேரவை தொகுதிகளில் 5 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளது.

மீதி உள்ள 3 தொகுதிகளில் 2 ஜேடிஎஸ் வசமும், ஒரு தொகுதி பாஜ வசமும் உள்ளன. 2019 மக்களவை தேர்தலில் மைசூரு உட்பட 25 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் மட்டும் கிடைத்தது. மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post மன்னருக்கும் சாமானியருக்கும் இடையே மைசூருவில் போட்டி: பாஜவை வீழ்த்த சித்தராமையா தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mysuru ,Siddaramaiah ,BJP ,Lok Sabha ,Congress ,Karnataka ,Chief Minister ,Sabha ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...