×

குஜராத் அம்ரேலி வேட்பாளர் தேர்வில் பாஜவில் கோஷ்டி மோதல் தொண்டர்கள் கைகலப்பு

அம்ரேலி: குஜராத் மாநிலம் அம்ரேலி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தி தொடர்பாக 2 கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டு சிலர் படுகாயமடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு வரும் மே 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அம்ரேலி தொகுதியில் சீட் கேட்டு தற்போதைய எம்பி நரண் கச்சாடியா, எம்எல்ஏ கவுசிக் வெக்காரியா ஆகியோர் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர்.

இறுதியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ள பரத் சுட்டாரியா என்பவரை வேட்பாளராக பாஜ தலைமை அறிவித்தது. சுட்டாரியாவை வேட்பாளராக ஏற்க முடியாது என தற்போதைய எம்பி கச்சாடியா மற்றும் சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கும் விதமாக நேற்றுமுன்தினம் கட்சி கூட்டம் நடந்தது. மாநில அமைச்சரும் தொகுதி பொறுப்பாளருமான பூபேந்திர சுதாசமா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் எம்பியின் ஆதரவாளர்கள், எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அமைச்சர் பூபேந்திர சுதாசமா கூறுகையில்,‘‘ அம்ரேலி பாஜ வேட்பாளராக சுட்டாரியா போட்டியிடுவார். இதில் எந்த மாற்றமும் இல்லை, கட்சியினர் யாருக்கும் அதிருப்தி எதுவும் இல்லை’’ என தெரிவித்தார். ஆனால் அந்த தொகுதியில் சாதி அடிப்படையில் சீட் வழங்கப்பட்டதால் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என பாஜ முன்னாள் மாவட்ட தலைவர் பரத் கன்னாபர் குற்றம் சாட்டினார்.

The post குஜராத் அம்ரேலி வேட்பாளர் தேர்வில் பாஜவில் கோஷ்டி மோதல் தொண்டர்கள் கைகலப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Amreli ,BJP ,Amreli Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...