×

ஒன்றிய அரசின் நடைமுறைகளால் உள்ளதும் போச்சு… நசிந்து நொடிந்து போன நெசவுத்தொழில்: தேர்தலில் பாடம் புகட்ட நெசவாளர்கள் ரெடி

அருப்புக்கோட்டை: ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி, மூலப்பொருட்கள் விலை உயர்வால் நெசவுத்தொழில் நலிவடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், தேர்தலில் பாடம் புகட்ட காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவுத்தொழிலுக்கு புகழ் பெற்றது. முன்பு கைத்தறியை பயன்படுத்தி தொழில் செய்தவர்கள் காலப்போக்கில் விசைத்தறிக்கு மாறி விட்டனர். சுமார் 7 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் நேரடியாகவும், 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். காட்டன் பாலியஸ்டர் நூல்களை பயன்படுத்தி சேலைகள் நெய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் சேலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. தினமும் பத்தாயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் தொழில் நசிந்து போய் உள்ளது.

* ஜிஎஸ்டியால் பாதிப்பு:
ஒன்றிய அரசு கடந்த 2017ல் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. ஜவுளிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பில் முடித்து 20ம் தேதிக்குள் வரி கட்டிவிட வேண்டும். ஒரு வியாபாரிக்கு சரக்குகளை அனுப்பினால் மூன்று மாதம் கழித்து தான் பணம் தருகின்றனர். ஆனால் உற்பத்தியாளர்கள் சரக்கு அனுப்பிய பில்லுக்கு உண்டான பணத்தை மாதந்தோறும் ஜிஎஸ்டி கட்டிவிட வேண்டும். ஜிஎஸ்டி கட்ட தவறினால் ஒவ்வொரு நாளும் அபராதம் விதிக்கின்றனர்.

மேலும் வருடந்தோறும் வருமான வரியும் கட்ட வேண்டும். செய்கிற ஒரு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி, வருமான வரி கட்ட வேண்டிய சூழ்நிலை. வியாபாரிகளை பணம் கட்டச்சொல்லி நிர்பந்திக்கவும் முடியாது. அவ்வாறு செய்தால் ஆர்டரை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

* மிரட்டும் ஆன்லைன்:
இதுபோக ஆன்லைன் பரிவர்த்தனை செய்யச் சொல்கிறார்கள். அதற்கு சேவை வரி என லட்சத்திற்கு ரூ.15 பிடித்தம் செய்கின்றனர். மேலும் ஐந்து கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இ-இன்வாய்ஸ் மூலம் தான் வியாபாரம் செய்ய வேண்டும். ஒரு வருடத்தில் வியாபாரம் அதிகமாக செய்து மறு வருடத்தில் குறைவாக செய்தாலும், கடந்த ஆண்டு வியாபாரம் செய்த அளவிற்கு தான் இ-இன்வாய்ஸ் மூலம் வியாபாரம் செய்ய வேண்டும். குறைத்து காண்பித்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் தற்போது எம்எஸ்எம்இ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் உதயம் சர்டிபிகேட் வாங்க வேண்டும். இதன் மூலம் வியாபாரிகளுக்கு ஜவுளிகளை விற்பனைக்கு கொடுத்தால் 45 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஜவுளி வாங்கிய வியாபாரி பணம் கட்டாமல் வைத்திருந்தால் அதை லாப கணக்கில் ஏற்றி அதற்கு அவர் ஜிஎஸ்டி கட்ட வேண்டும்.

எனவே வியாபாரிகள் சரக்குகளை தேவைக்கு வாங்கிக் கொள்கிறோம் எனக் கூறுகின்றனர். இதனால் ஜவுளிகள் தேக்கமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, தற்போது புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எம்எஸ்எம்இ ஆகியவற்றால் நெசவுத் தொழில் செய்கிற ஆர்வம் குறைந்து வருகிறது. லாபமில்லை என்பதுடன் எதற்கெடுத்தாலும் வரி அதிகமாக கட்ட வேண்டியுள்ளது.

எனவே ஜிஎஸ்டி வரியை ஒரு சதவீதமாகவும் எம்எஸ்எம்இ நடைமுறைச் சட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தவும் 45 நாட்கள் என்பதை 90 நாட்களுக்கு என மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே ஒன்றிய அரசின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்’’ என்றனர்.

The post ஒன்றிய அரசின் நடைமுறைகளால் உள்ளதும் போச்சு… நசிந்து நொடிந்து போன நெசவுத்தொழில்: தேர்தலில் பாடம் புகட்ட நெசவாளர்கள் ரெடி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Aruppukkottai ,Virudhunagar district ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;...