×

விளவங்கோட்டில் மல்லுக்கட்டும் பெண் வேட்பாளர்கள்

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த முறை களத்தில் பெண்கள் மோதும் தொகுதியாக விளவங்கோடு தொகுதி மாறி இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் களமிறங்குகிறது. அந்த கட்சியின் சார்பில், தாரகை கத்பர்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் பேத்தி ஆவார். இவரது தந்தை கத்பர்ட் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவர் ஆவார். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். எம்.ஏ. எம்.பில்., பிஜிடிசிஏ, எம்.பி.ஏ, பி.எச்.டி. படித்துள்ளார். பா.ஜ. சார்பில் வி.எஸ். நந்தினி வேட்பாளராக இறங்கி உள்ளார். நாயர் வகுப்பை சேர்ந்தவர். பி.பி.ஏ. பட்டதாரி. அதிமுக வேட்பாளர் ராணி, கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். பி.ஏ. மற்றும் எம்.எஸ்.டபிள்யு படித்துள்ளார்.

தற்போது கட்சியின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி போட்டியிடுகிறார். கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்தவர். இவரது கணவர் சேவியர் குமார், சமீபத்தில் மைலோடு ஆலய பங்கு தந்தை அலுவலகத்தில் நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். ஜெமினி, எம்.எஸ்.சி. விலங்கியல் மற்றும் பி.எட்., எம்.பில் படித்துள்ளார். தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜெமினி, நாம் தமிழர் கட்சியின் மகளிரணி நிர்வாகியாக இருந்தார்.

ஆசிரியை பணி காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார். தற்போது கணவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பெண்கள் நேரடியாக மோதும் தொகுதியாக விளவங்கோடு பார்க்கப்படுகிறது. தேசிய கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த ெதாகுதியில் 1952ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 17 தேர்தல்களில் 12 முறை காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது. 3 முறை பெண் வேட்பாளரே வென்ற தொகுதி என்பதால், இந்த முறை அனைத்து கட்சிகளும் பெண் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

The post விளவங்கோட்டில் மல்லுக்கட்டும் பெண் வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Vilavankot ,Vijayatharani ,MLA ,Vilavankode ,Kumari district ,Congress party ,Bharatiya Janata Party ,Dinakaran ,
× RELATED நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக...