×

பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியம்: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்: ஜி.கே.வாசன் வெளியிட்ட தமாகா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

சென்னை: பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று ஜி.ேக.வாசன் வெளியிட்ட தமாகா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகா ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இதனை தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொருளாளர் இ.எஸ்.எஸ்.ராமன், பொது செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, சக்தி வடிவேல், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தமாகா தேர்தல் அறிக்கையில், ‘ தேசிய அளவிலான நதிகளை இணைக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு துணை நிற்போம். நமது மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்திடவும் தமாகா குரல் கொடுக்கும். மேலும் காவிரி, பாலாற்றில் மழை வெள்ள காலங்களில் பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து தடுப்பணைகள் கட்ட குரல் கொடுப்போம்.

ஒன்றிய அரசுடன் இணைந்து மதுவிலக்கால் ஏற்படும் நிதி நெருக்கடியை சரி செய்து பூரண மதுவிலக்கை கொண்டுவர த.மா.கா பாடுபடும். போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உறுதி அளிக்கும். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதை சட்டவடிவமாக்க ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமாகா துணை நிற்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடத்துடன் கூடிய கல்வி முறையை அமல்படுத்த பாடுபடுவோம் என்பது உள்பட 23 வாக்குறுதிகளை தமாகா வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும். சைக்கிள் சின்னத்திற்காக இத்தனை காலம் போராடி பார்த்தேன் கிடைக்கவில்லை. 9 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது. இதற்கு அரசியல் காரணம் கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார்.

The post பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியம்: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்: ஜி.கே.வாசன் வெளியிட்ட தமாகா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Tamaka ,GK Vasan ,CHENNAI ,Tamaka Erode ,Tuticorin ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...