×

இரு மாநில முதல்வர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்சிங்’: 4 கோடீஸ்வரர்களுடன் கைகோர்த்து தேர்தலில் வெற்றிபெற சதி

* டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களை சிறையில் தள்ளி, 4 கோடீஸ்வர தொழிலதிபர்களுடன் இணைந்து மேட்ச்-பிக்சிங் சதி மூலம் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி ஜெயிக்கப் பார்க்கிறார்’ என டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியின் கண்டன பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்கிற கண்டன ஆர்பாட்டம் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்பி திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்,

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், திரிணாமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

கிரிக்கெட்டில் நடுவரையும், கேப்டனையும் படிய வைக்க முடியாத சமயத்தில், வீரர்களை விலைக்கு வாங்கி, போட்டியில் வெற்றி பெறுவதை, மேட்ச்-பிக்சிங் என்பார்கள். இப்போது மக்களவை தேர்தல் நடக்கப் போகிறது. இதில் நடுவர்களை தேர்வு செய்தது யார்? போட்டி தொடங்குவதற்கு முன் 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி, பிரதமர் மோடி மேட்ச்-பிக்சிங் செய்து இத்தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறார். மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என அவர்கள் முழங்குகிறார்கள்.

ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், மேட்ச்-பிக்சிங், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான அழுத்தம், ஊடகங்களை விலைக்கு வாங்குதல் என இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் பாஜ கூட்டணியால் 180 இடங்களைக் கூட தாண்ட முடியாது. காங்கிரசின் வங்கி கணக்குகள் அனைத்தையும் அவர்கள் முடக்கி உள்ளனர். 2 மாநில முதல்வர்களை கைது செய்துள்ளனர். இது என்ன மாதிரியான தேர்தல்? சிபிஐ, அமலாக்கத்துறை, போலீஸ் மூலம் மிரட்டி நாட்டை ஆளலாம் என நினைக்கிறார்கள்.

நீங்கள் ஊடகங்களை விலைக்கு வாங்கி அடக்கலாம். ஆனால் இந்தியாவின் குரலை அடக்க முடியாது. இந்த மக்களின் குரலை இந்த உலகில் எந்த சக்தியாலும் அடக்க முடியாது. ‘நாங்கள் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றவுடன் அரசியலமைப்பை மாற்றுவோம்’ என பாஜ எம்பி ஒருவர் கூறினார். இது வாய் தவறி சொன்ன வார்த்தைகள் அல்ல. இப்படி பேசி அதன் விளைவுகளை சோதிப்பதற்காக செய்யப்பட்டுள்ளது. பாஜ வெற்றி பெற்றால், மக்களின் சொத்துக்களை பறிப்பதற்காக அவர்கள் அரசியலமைப்பை மாற்றுவார்கள்.

ஜிஎஸ்டியால் யார் பலன் அடைந்தார்கள்? கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. நாட்டின் மொத்த செல்வமும் ஒரு சதவீத மக்களிடம் உள்ளது. 70 கோடி மக்களின் சொத்துக்கு சமமான சொத்து வெறும் 22 பேரிடம் உள்ளது. இப்படி, பிரதமர் மோடி தனக்கு வேண்டப்பட்ட மூன்று நான்கு கோடீஸ்வரர்களுடன் சேர்ந்து மேட்ச்-பிக்சிங் செய்து, ஏழைகளிடம் இருந்து அரசியலமைப்பை பறிக்கப் பார்க்கிறார்.

அரசியலமைப்பு என்பது மக்களின் குரல், அது முடிவடையும் நாளில் இந்த நாடு அழிந்து விடும். அரசியலமைப்பு இல்லையென்றால் ஏழைகளின் உரிமைகளும், இடஒதுக்கீடும் போய்விடும். மேட்ச்-பிக்சிங் மூலம் பாஜ தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அப்போது நாடு காப்பாற்றப்படாது. எங்கும் தீப்பிடித்து எரியும். எனவே இந்த தேர்தல் வெறும் வாக்குகள் சம்மந்தப்பட்ட சாதாரண தேர்தல் அல்ல. நாட்டையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டிய தேர்தல். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

5 இந்தியாவின் கோரிக்கைகள்: இந்தியா கூட்டணியின் 5 கோரிக்கைகளை பிரியங்கா காந்தி வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான களத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

* எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.

* ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

* தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் நிதியை வலுக்கட்டாயமாக முடக்கும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ செய்த முறைகேட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் – பாஜ விஷம் போன்றவை
பேரணியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் தேர்தல் என்பதால் நாம் ஒற்றுமையாக போராட வேண்டும். இந்த தேர்தல் சமமற்ற களமாக உள்ளது.

மைதானத்தை தோண்டி, எதிர்க்கட்சிகளை கிரிக்கெட் விளையாட பிரதமர் மோடி அழைக்கிறார். பாஜவும் ஆர்எஸ்எஸ்சும் விஷம் போன்றவை. அவர்கள் நாட்டை அழித்துவிட்டனர். மேலும் அதை அழிக்க அனுமதிக்கக் கூடாது. மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படும் வரை நாடு முன்னேற முடியாது. எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக பிரதமர் மோடி அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்கிறார்’’ என்றார்.

* கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவிகள் முதல் முறை பேச்சு
பேரணியில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா முதல் முறையாக தனது அரசியல் உரையை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், ‘‘முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜ சொல்கிறது. அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? அவரது கைது நியாயமானதா? அவர் ஒரு சிங்கம். அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது’’ என்றார்.

இதே போல, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பேசுகையில், ‘‘அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அனைத்து உத்தரவாதங்களையும் பாஜ கூட்டணி அரசு அழித்து வருகிறது. எனவே மக்கள் தங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.

* அதிகாரம் நிரந்தரமல்ல ஆணவம் அழிக்கப்படும் பேரணியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: நான் சிறுவயதில் இருந்தே ராம்லீலா மைதானத்திற்கு வருகிறேன். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்படுகிறது. என் பாட்டி இந்திராகாந்தியுடன் இங்கு வரும் போது எனக்கு அவர் ராமாயணத்தை விவரிப்பார். இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை ராம பக்தர் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ராமர் உண்மைக்காகப் போராடியபோது, அவரிடம் பெரிய சக்தியோ, வளங்களோ இல்லை. ஒரு தேர் கூட இல்லை. ஆனால் ராவணனிடம் ரதங்கள், வளங்கள், படைகள், குவியல் குவியலாக தங்கம் இருந்தன. ராமரிடம் உண்மை, நம்பிக்கை, அன்பு, இரக்கம், அடக்கம், பொறுமை, தைரியம் மற்றும் உண்மை இருந்தது. ராமரின் கதை என்ன சொல்கிறது என்றால், அதிகாரம் நிரந்தரமானது அல்ல.

ஆணவம் அழிக்கப்படும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனவே, பாஜ ஜனநாயக விரோத தடைகளை உருவாக்கினாலும், இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கவும், எதிர்த்து போராடவும், வெற்றி பெறவும், இந்தியா கூட்டணி உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களியுங்கள்: எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

* அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி): கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்காக உலகம் முழுவதும் பாஜ விமர்சிக்கப்படுகிறது. நீங்கள் 400 தொகுதிகளில் வெல்வீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால், ஏன் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை பார்த்து பயப்படுகிறீர்கள்? தேர்தல் பத்திரம் மூலம் ஈடி, சிபிஐயை பயன்படுத்தி பாஜ நன்கொடை வசூல் செய்தது நாட்டுக்கே தெரியும். இதை மறைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. எனவே ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

* சம்பாய் சோரன் (ஜார்கண்ட் முதல்வர்): ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் ஒற்றுமையாக ஒன்றாக இருக்கின்றோம் என்ற செய்தியை இப்பேரணி வெளிப்படுத்தும். இந்த நாட்டில் பாஜவின் சித்தாந்தம், எதேச்சதிகாரத்தை வளர விடமாட்டோம்.

* தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி தலைவர்): மோடியின் கேரண்டிகள், சீன பொருட்கள் போன்றவை. 2, 3 முறைதான் பயன்படுத்த முடியும். அதன் பின் கோளாறாகி விடும். எனவே மோடியின் உத்தரவாதங்கள் எல்லாம் வெறும் தேர்தலுக்காக மட்டுமே. அதை நம்பாதீர்கள்.

* உத்தவ் தாக்கரே (சிவசேனா தலைவர்): தேர்தல் பத்திரம் பாஜவை அம்பலப்படுத்தி விட்டது. யார் திருடன் என்பதை ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியப்படுத்திவிட்டது. மற்ற கட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதி என விமர்சிக்கும் பாஜ, அதே நபர்கள் அவர்கள் கட்சிக்கு மாறியதும் நல்லவர்களாகி விடுகிறார்கள். வாஜ்பாய் தலைமையிலான பாஜ கொள்கை பிடிப்புடன், நல்ல சிந்தாந்தத்தை கொண்டிருப்பது. ஆனால் இப்போதைய பாஜவில் வெறும் ஊழல் பேர்வழிகள் தான் இருக்கிறது. இது பாரதிய ஜனதா கட்சி அல்ல, ஊழல் ஜனதா கட்சியாகி விட்டது.

* சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்): இந்திய அரசியலில் இன்று புதிய ஆற்றல் உருவாகி உள்ளது. இது, ஜனநாயகத்தை வெல்லவும், எதேச்சதிகாரத்தை வீழ்த்தவும் செய்யும். தேசத்தை அழிக்கும் சக்திகளை நாம் தோற்கடிப்போம்.

* டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்): நாடு ஒரு பேரழிவைச் சந்தித்து வருகிறது. எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து அரசு அமைப்புகளையும் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. இதிலிருந்து நம் நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் நமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும்.

* தீபாங்கர் (இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர்): தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க பயன்படுத்தி உள்ளனர். எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். அப்படி வாங்க முடியாதவர்களை கைது செய்கின்றனர். பீகாரில், எங்கள் தலித் எம்எல்ஏ மனோஜ் மன்சில் மற்றும் 22 பேர் போலி வழக்குகளில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

* ஜி.தேவராஜன் (அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர்): இந்தியாவில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற முதல்வர்கள் கைது செய்யப்படுவது ஜனநாயக படுகொலை. நரேந்திர மோடி ஒரு ஊதப்பட்ட பலூன். வரும் தேர்தல் அந்த பலூனை நாம் வெடிக்கச் செய்ய வேண்டும்.

The post இரு மாநில முதல்வர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்சிங்’: 4 கோடீஸ்வரர்களுடன் கைகோர்த்து தேர்தலில் வெற்றிபெற சதி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,RAHUL ,INDIA ,DELHI ,NEW DELHI ,PM ,MODI ,JHARKHAND STATE ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய...