×

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரியாமல் பேசியுள்ளார் அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம்: முத்தரசன் கண்டனம்

சென்னை: அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில், கட்சியின் தேர்தல் அறிக்கையை மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று வெளியிட்டார். தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார். பின்னர் மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் இனி நடைபெறுமா என்கிற அச்சம் ஏற்படும் அளவுக்கு தற்போதைய சூழல் உள்ளது. பாகிஸ்தான், சீனா போர் தொடுத்தால் எப்படி செயல்படுமோ, அதுபோல் ஒன்றிய அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிரான போரை தொடங்கி இருக்கிறது. ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் மோடியின் ஏவல் துறையாக செயல்படுகிறது.

எந்த வரலாறும் தெரியாத அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு மட்டும் அதிகம். இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் நடந்தது. அதை பிஞ்ச செருப்பு என்று திமிர் பிடித்து அண்ணாமலை கூறியிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜ கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குகிறது. ஆனால், எதிர்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை அல்லது தாமதம் செய்யப்படுகிறது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

தேர்தல் பத்திர‌ ஊழல் உலகமே கண்டிராத ஊழல். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பல கோடி ரூபாய் பெற்று பாஜ அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த தேர்தலை யுத்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்றி பெறும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் என்ன செய்வோம் என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

* வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33%
எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை முழுமையாக அமலாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 200 நாட்கள் வேலை, அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33%, அனைத்து பள்ளிகளிலும் எந்தவிதமான வன்முறைக்கும் தவறான பயன்பாட்டுக்கும் குழந்தைகள் ஆளாகாத சூழல் உருவாக்குதல், எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம் அமைத்து சலுகை விலையில் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

The post இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு தெரியாமல் பேசியுள்ளார் அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு அதிகம்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Mutharasan ,Chennai ,State Secretary of the ,Communist Party of India ,Senior ,Nallakannu ,
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்