×

தாமதமாக கணக்கை தாக்கல் செய்ததால் அபராதம், வட்டி; காங்கிரசிடம் இதுவரை ₹3,567 கோடி கேட்டு ‘ஐடி’ நோட்டீஸ்: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை பிடித்தம் செய்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்ததற்காக, அக்கட்சிக்கு அபராதம் மற்றும் ரூ.103 கோடி வட்டி உட்பட ரூ.135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை பிடித்தம் செய்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. ேமலும் சமீப காலங்களில் பெறப்பட்ட அனைத்து வருமான வரி நோட்டீஸ்களையும், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாக சேர்த்து விசாரிக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக சீதாராம் கேசரி இருந்த காலகட்டத்தில், அதாவது 1994-95ம் நிதியாண்டில் வருமான வரித்துறை சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் கட்சி 2016ம் ஆண்டில் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மனுவுடன் 135 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுவையும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அடுத்த ஓரிரு நாளில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக 1994-95ம் நிதியாண்டுக்கான வருமான வரி பாக்கியாக ரூ.53 கோடி செலுத்த காங்கிரஸுக்கு சமீபத்தில் நோட்டீஸ் வந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,567.25 கோடி மதிப்பிலான நோட்டீஸ்கள் வந்துள்ளன. அதாவது 1993 – 94ம் நிதியாண்டில் ரூ.54 கோடி, 2014 – 2015ம் நிதியாண்டில் ரூ.663.05 கோடி, 2015 – 2016ம் நிதியாண்டில் ரூ.663.89 கோடி, 2016 – 2017ம் நிதியாண்டில் ரூ.182 கோடி, ரூ.417. 31 கோடி, 2017 – 2019 நிதியாண்டில் ரூ.179 கோடி, 2018 – 19ம் நிதியாண்டில் ரூ.918 கோடி, 2019 – 2020ம் நிதியாண்டில் ரூ.490 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. புதியதாக அடுத்தடுத்து நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பி வருவதால், காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரங்கள் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், டெல்லி உயர் நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ஆனால் காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்படாததால், தற்போது காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது.

The post தாமதமாக கணக்கை தாக்கல் செய்ததால் அபராதம், வட்டி; காங்கிரசிடம் இதுவரை ₹3,567 கோடி கேட்டு ‘ஐடி’ நோட்டீஸ்: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Congress ,Supreme Court ,NEW DELHI ,CONGRESS PARTY ,TAX DEPARTMENT ,Congressional Party ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு