×
Saravana Stores

விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பேரணியும், பொதுக்கூட்டமும் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத்துறை கஸ்டடியில் உள்ளார். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் சுமார் 28 கட்சிகள் பங்கேற்றன.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் போராட்டத்தில் வாசிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையில்;
டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் கைதுக்கு எனது கடுமையான கண்டனங்கள். பா.ஜ.க அரசு தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும்.ஆனால் பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது.

இது போன்ற கைதுகள், ‘இந்தியா’ கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே ஆகும்!

அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவுக்கு எதிராகப் பரப்புரை செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்து, அதனைத் தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளனர். ஆனால், அவரது பரப்புரை ஏற்படுத்தி இருக்க வேண்டியதை விட, அவரது கைது மூலமாகக் கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிகமிக அதிகம்.

அருமை நண்பர் கெஜ்ரிவால், சிறைக்குள் இருந்து ஆட்சியை மட்டும் நடத்தவில்லை, இந்தியா கூட்டணியின் எழுச்சிக்கும் தூண்டுதலாக அமைந்து விட்டார். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாகத் துணை நிற்கிறது.

‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும்தான் பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். நான் தினந்தோறும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள். பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என கூறப்பட்டிருந்தது.

The post விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : EU BJP government ,Chief Minister ,Mu K. Stalin ,New Delhi ,Delhi ,Kejriwal ,Opposition India ,EU government ,Ramleela Stadium ,Delhi government ,
× RELATED உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த...