கொல்கத்தா: பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையில் இருக்கும் திரிணாமுல் மாஜி நிர்வாகியை அமலாக்கத்துறை கைது செய்ததால், மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் மீது ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சந்தேஷ்காலி என்ற தீவுப் பகுதியில் 10 கி.மீ தூரத்துக்கு உள்ள பழங்குடியினரின் நிலங்களை ஷாஜகான் ஆக்கிரமித்துள்ளார். பழங்குடியின பெண்களை கட்சி அலுவலகத்துக்கு இரவில் வரச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தால், ஷாஜகான் மீது உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களை சித்ரவதை செய்துள்ளனர். ஹாஜகான் அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சந்தேஷ்காலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து சந்தேஷ்காலியில் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 5ம் தேதி சோதனை நடத்தியது.
அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகளை ஷாஜகான் ஆதரவாளர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். அதன்பின் ஷாஜகான் தலைமறைவானார். சுமார் 55 நாட்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 29ம் தேதி அன்று அவரை மேற்குவங்க காவல் துறை கைது செய்தது. அதோடு அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது பாசிர்ஹாட் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ஷேக் ஷாஜகானை, நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது, வேறு சில இடங்களில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவரை கைது முடியும் என்ற அடிப்படையில் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அதுவும் பாசிர்ஹாட் சப்-டிவிஷனல் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே, ஷேக் ஷாஜகானை கைது செய்ததாகவும், மேற்கண்ட குற்ற வழக்குகள் தொடர்பாக சிறைக்குள் அவரிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
The post பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதான நிலையில் சிறையில் இருக்கும் திரிணாமுல் மாஜி நிர்வாகியை கைது செய்த ‘ஈடி’: மேற்குவங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.