×

வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க மலைப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பப்படுமா?: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக தமிழக-கேரளா வனப்பகுதிகள் அருகருகே உள்ளதால், விலை உயர்ந்த சந்தனம், தேக்கு, தோதகத்தி, உள்ளிட்ட மரங்களும், வனத்தை காக்கும் புலிகள், யானைகள், மான் இனங்கள், அரியவகை பாம்புகள், வாழ்கின்றன. தவிர அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் கூடிகட்டி வாழக்கூடிய பறவை இனங்களின் பிறப்பிடமாகவும், உள்ளது.

இயற்கை உயிரிளங்களின் காவலனாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பல்லுயிர் பெருக்க மண்டலமாகவும் உள்ளது, புலிகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் இயற்கையை அரவணக்கும் காட்டுயிர்கள், பல்லுயிர்கள் அதிகமான அளவில் வாழ்ந்து வருகின்றன. எனவே அடர்ந்த காட்டு பகுதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது.

ராஜபாளையம் பெரும்பாலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம். இதனால் ராஜபாளையம் எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும். இங்கு விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமானோர் உள்ளனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அத்திகோவில், கான்சாபுரம், தாணிப்பாறை, கிழவன் கோவில், பட்டுப்பூச்சி, பிளவக்கல் அணை, வ.புதுப்பட்டி, வ.மீனாட்சிபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட வனச்சரக பகுதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இப்பகுதிகளில் மா, பலா, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அளவில் யானை, மான், கேளையாடு, காட்டு பன்றிகள்,வரையாடு, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் திருவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகமாகவும் இப்பகுதியினை மத்திய அரசு அறிவித்துள்ளது. வத்திராயிருப்பு வனச்சரக பகுதியில் உள்ள விலங்குகள் வனப்பகுதிக்குள் நீர் இல்லாதபோது அடிக்கடி நீர் அருந்துவதற்காக வனப்பகுதியை விட்டு மலை யடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வந்து விடுகின்றன. அவ்வாறு வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர் வகைகள், மா,பலா, தென்னை, வாழை உள்ளிட்ட விவசாயத்தையும் நாசம் செய்து விடுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் வனத்துறையினரால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. வனப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் வற்றி வறண்டுபோய் காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேற வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை அவ்வப்போது சேதப்படுத்தியும் வருகிறது. இவை சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் தேடி விளைநிலங்களுக்கு படையெடுக்கும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க மலைப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பப்படுமா?: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Rajapalayam ,Vathirayirupu ,Virudhunagar district ,Tamil Nadu-Kerala forest ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து