×

சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்:  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு  மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

பெரம்பூர், மார்ச் 31: சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக, தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம், என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. அதன்படி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி, அம்பேத்கர் கலை கல்லூரியில் பயிற்சி வகுப்பில், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் சுமார் 1137 பேர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். பெரம்பூர் சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுஷியா தேவி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணவாளன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, பயிற்சியில் கலந்துகொண்ட அரசு ஊழியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலையொட்டி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தேர்தல் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 14,000 நபர்கள் வரை நமக்கு தேவைப்படுவார்கள். இருந்தாலும், கூடுதலாக பயிற்சி வகுப்பு கொடுத்துள்ளோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் பயிற்சி வகுப்பில் 80 சதவீதத்திற்கும் மேல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்கள். இந்த பயிற்சி முகாம், 16 இடங்களில் நடைபெற்றது. அதில் வராதவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நடத்தப்படுகிறது அதில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை அல்லது தேர்தல் பணிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை தொடர்பு கொண்டு தங்களது விளக்கத்தை அளித்து தேர்தல் பணியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம்.

வர்கள் தான், தேர்தல் நடத்தும் அதிகாரிகள். அதற்காக தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தலின்போது, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இதற்காக, 2 முறை மாற்றுத்திறனாளிகளின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். 29 வகையான மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து தருகிறோம். வீட்டிலேயே வாக்களிக்க விரும்பினாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளோம். இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் வீட்டிலேயே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் வீட்டிலேயே வாக்களிக்க ஏற்பாடுகளை செய்துள்ளோம், பலரும் தேர்தல் வாக்குச்சாவடியில் வந்து வாக்களிக்கவே விரும்புகின்றனர். எனவே, அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. சென்னையை பொருத்தவரை வாக்காளர்களின் மிக அருகிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பை தவிர்க்க வேண்டும்
மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களிடம் பேசுகையில், ‘‘இங்கு அதிகாரிகள், ஊழியர்கள் என யாரும் பிரித்து பார்க்க கூடாது. அனைவரும் இணைந்து மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்று நினைத்து பணியாற்ற வேண்டும். தேர்தலின்போது காலையிலேயே பணிக்கு வந்துவிட வேண்டும் தாமதம் கூடாது, 15 நிமிடத்தில் அனைத்தையும் சரிசெய்து விடலாம் என நினைத்தால் கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டு விடும். அதனால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்க வேண்டும், பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். தற்போது, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதிகரித்துவிட்டதால், ஒரு சிறு தவறு செய்தாலும் அது பெரியதாக வெளியே சென்று விடும். எனவே, அதற்கு இடம் தரக்கடாது தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் நாம் செயல்படுகிறோம், அதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும், என்றார்.

The post சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அமைக்கும் பணி தீவிரம்:  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு  மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perambur ,Radhakrishnan ,District Election Officer ,Chennai's… ,Dinakaran ,
× RELATED கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே...