×

புயல் கனமழையில் பாதிக்கப்பட்ட போது மக்களோடு துணை நின்றது திமுக தான்: தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்

சென்னை, மார்ச் 31: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் நேற்று இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அப்போது வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தென்சென்னை தொகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தது திமுகவும், திமுக அரசாங்கமும் தான். ஆனால், வேறு யாரும் இந்த தொகுதியை எட்டிக் கூட பார்க்கவில்லை. தேர்தல் என்ற உடனே பிரதமர் 4, 5 முறை தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் 38 ஆயிரம் கோடி நிதி கேட்டார். இப்போது வரை ஒரு நயா பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை.

நிதி அமைச்சர் வந்தார். ஒன்றிய குழு வந்து ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக வெள்ள சேதத்தை கையாண்டுள்ளது என்று சான்றிதழ் அளித்து சென்றது. ஆனால், நிவாரண தொகையை கொடுக்கவில்லை. தற்போது, வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க திமுக அரசு வடிகால் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. வேளச்சேரி – பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. நான், பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்த பிறகு, மீண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வேளச்சேரிக்கு மட்டும் ₹2.20 கோடி ஒதுக்கி, உள் விளையாட்டு அரங்கம், பேருந்து நிறுத்தம், அங்கன்வாடி மையம் போன்ற பணிகள் செய்துள்ளேன். இனியும், உங்களுக்காக உங்களோடுதான் இருப்பேன். இந்த பகுதியில் கோயில் நில பிரச்னையை அறநிலையத் துறையிடம் பேசி விரைவில் சரிசெய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரபாகர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், ‘‘ஆண்டுதோறும் இந்த பகுதியில் மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் நிற்கும். ஆனால், இப்போது திமுக ஆட்சி அமைந்ததும், இந்த தெகுதிக்காக மட்டும் முதல்வரிடம் வலியுறுத்தி ₹110 கோடி ஒதுக்கப்பட்டு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இப்போது மழை பெய்தால் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்த சுவடே தெரியாத அளவிற்கு மழை நீர் வெளியேறி விடுகிறது,’ என்றார். பிரசாரத்தின்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், பகுதி செயலாளர்கள் ராசா, கண்ணன், வட்ட செயலாளர்கள் கோவிந்தராசன், ராசா, மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post புயல் கனமழையில் பாதிக்கப்பட்ட போது மக்களோடு துணை நின்றது திமுக தான்: தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,South Chennai ,Tamilachi Thangapandian ,Chennai ,Parliamentary Constituency ,Velachery ,Dinakaran ,
× RELATED சுங்கச்சாவடிகளை அகற்ற எதிர்க்கட்சி...