புதுடெல்லி: கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் மீன்பிடி கப்பலை மீட்ட இந்திய கடற்படை 23 பாகிஸ்தானியர்களை காப்பாற்றி உள்ளது. இந்திய பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் ஏடன் வளைகுடா அருகே உள்ள சொகோத்ரா தீவுப் பகுதியில் ஈரான் நாட்டை சேர்ந்த ‘அல் காம்பர்’ என்கிற மீன்பிடி படகை ஆயுதம் ஏந்திய 9 கடற்படை கொள்ளையர்கள் கடத்தியிருப்பதாக கடந்த 28ம் தேதி இந்திய கடற்படைக்கு தகவல் வந்தது. உடனடியாக, ஐஎன்எஸ் சுமேதா கடற்படை கப்பல் விரைந்து சென்று கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலை இடைமறித்தது. அதோடு, ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் திரிசூலும் அங்கு விரைந்தது. இதைத் தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் 9 பேரும் கடற்படையிடம் சரண் அடைந்தனர். ஈரான் மீன்பிடி கப்பலும், அதிலிருந்த 23 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட கப்பல் சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முடித்துக் கொண்டு நேற்று தனது பயணத்தை தொடர்ந்ததாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
The post கடற்கொள்ளையர்கள் கடத்திய ஈரான் மீன்பிடி கப்பலை மீட்டது இந்திய கடற்படை: 23 பாகிஸ்தானியர்கள் மீட்பு appeared first on Dinakaran.