×

அதெல்லாம் செல்ல திட்டு…இதுக்கு போய் விவாகரத்தா? ‘பேயே, பிசாசே’ என திட்டுவது கொடுமைப்படுத்துவது ஆகாது: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: ‘கணவன், மனைவி ஒருவரை ஒருவர் ‘பேயே, பிசாசே’ என திட்டிக் கொள்வது கொடுமைப்படுத்தும் வரம்பிற்கு வராது’ என பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் குப்தா, பீகாரின் நவாடா பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்பின், வரதட்சணையாக கார் வேண்டுமென தனது மகளை கணவர் நரேஷ் குப்தாவும், மாமனார் சாடியோ குப்தாவும் உடல் அளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்துவதாக பெண்ணின் தந்தை கடந்த 1994ல் புகார் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாளந்தா மாவட்ட நீதிமன்ற தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தந்தை, மகன் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். இதை எதிர்த்த மேல் முறையீட்டு மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுக்குப் பிறகு தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, கணவன், மனைவி இருவருக்கும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது. கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிறை தண்டனை பெற்ற தந்தை, மகன் சார்பில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பிபேக் சவுதுரி, ‘‘எதிர் தரப்பினர் கணவன் குடும்பத்தினர் ‘பேயே, பிசாசே’ என திட்டி கொடுமைப்படுத்தியது கூறி உள்ளனர். பொதுவாக விவகாரத்தான கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் இதுபோன்ற வார்த்தைகள் கொடுமைப்படுத்தும் வரம்பில் வராது. எனவே எதிர்தரப்பின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. அதே போல, வரதட்சணை கொடுமை குறித்த எந்த ஆதாரத்தையும் அவர்கள் சமர்பிக்கவில்லை. எனவே கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை ரத்து செய்து, மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்கப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

The post அதெல்லாம் செல்ல திட்டு…இதுக்கு போய் விவாகரத்தா? ‘பேயே, பிசாசே’ என திட்டுவது கொடுமைப்படுத்துவது ஆகாது: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Patna High Court ,Patna ,Naresh Kumar Gupta ,Bokaro ,Jharkhand ,Nawada ,Bihar ,Dinakaran ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!