- ஹேமந்த் சோரன்
- கெஜ்ரிவால்
- புது தில்லி
- கல்பனா சோரன்
- ஜார்க்கண்ட்
- முதல் அமைச்சர்
- சுனிதா கெஜ்ரிவால்
- தில்லி
- ஜார்கண்ட் முக்தி
- மோர்சா
புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் நேற்று சந்தித்து பேசியது அரசியல் களத்தில் புயலை கிளப்பி உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து ஹேமந்த் சோரனின் மனைவில் கல்பனா சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதவி ஏற்பார் என செய்திகள் வௌியான நிலையில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பொறுப்பேற்றார். ஹேமந்த் சோரன் கைது ஒன்றிய பாஜ அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாஜ அரசின் பழி வாங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்துக்கு நேற்று சென்ற கல்பனா சோரன், சுனிதா கெஜ்ரிவாலை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், “இரண்டு மாதங்களுக்கு முன் ஜார்க்கண்டில் என்ன நடந்ததோ அதுதான் இப்போது டெல்லியிலும் நடந்துள்ளது. இருவரும் எங்கள் துயரங்களை பகிர்ந்து கொண்டோம். போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்தார்.
The post கெஜ்ரிவால் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு: போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.