×

அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 12வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் இரு அணிகளும் விளையாடிய முதல் 2 லீக் ஆட்டங்களிலும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளதுடன், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சாய்த்துள்ளன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 2 போட்டியிலுமே 200+ ரன் குவித்து அசத்தியுள்ளது. கேகேஆர் அணிக்கு எதிராக 4 ரன்னில் போராடி தோற்றாலும், மும்பைக்கு எதிராக 277 ரன் குவித்து ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்ததுடன் 31 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஹெட், அபிஷேக், மார்க்ரம், கிளாஸன் அதிரடி பேட்டிங்கில் அசத்தினர். அதே உற்சாகத்துடன் இன்று கில் தலைமையிலான குஜராத் அணியை சன்ரைசர்ஸ் சந்திக்கிறது. அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்க உள்ள இப்போட்டி பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் 2ல் குஜராத், ஒரு ஆட்டத்தில் ஐதராபாத் வென்றுள்ளன. மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் குஜராத் 2-3 என்ற கணக்கிலும், ஐதராபாத் 1-4 என்ற கணக்கிலும் வெற்றி தோல்வியை பெற்றுள்ளன.

டெல்லி – சென்னை: விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. மகளிர் பிரிமியர் லீக் தொடருக்குப் பின்னர் டெல்லி அரங்கில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், அங்கு நடைபெற வேண்டிய முதல் 2 லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் நடக்கின்றன. ஏற்கனவே பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் மண்ணைக் கவ்விய ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி, முதல் வெற்றிக்காக சிஎஸ்கே சவாலை எதிர்கொள்கிறது. ருதுராஜ் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை, தொடர்ச்சியாக 2 ஆட்டங்களிலும் வென்று முன்னிலை வகிக்கிறது. சென்னை – டெல்லி மோதிய 29 ஆட்டங்களில் சென்னை 19-10 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடைசியாக மற்ற அணிகளுடன் விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை 5-0 என்ற கணக்கிலும், டெல்லி 1-4 என வெற்றி/தோல்வியை சந்தித்துள்ளன.

The post அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Titans ,Sunrisers ,Modi Stadium, Ahmedabad ,AHMEDABAD ,IPL ,Gujarat Titans ,Hyderabad ,Modi Stadium Ahmedabad ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...