×

எதிர்க்கட்சியில் இருந்தால் ஊழல்..பா.ஜவில் சேர்ந்ததும் நற்சான்றிதழ்: 21 தலைவர்களை சுத்தமாக்கிய மோடி வாஷிங் மெஷின்; விலை ரூ.8500 கோடி தான்; கேலி செய்த காங்கிரஸ்

புதுடெல்லி: பா.ஜவில் இணைந்த 21 எதிர்க்கட்சி தலைவர்களின் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களை சுத்தம் செய்யப்பயன்படுத்திய மோடி வாஷிங் மெஷின் விலை ரூ.8500 கோடி என்று காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளில் பலம் வாய்ந்த தலைவர்கள் ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவில் இணைய மிரட்டப்படுகிறார்கள் அல்லது பா.ஜ கூட்டணியில் இணைய எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜவில் அல்லது பா.ஜ கூட்டணியில் இணைந்த தலைவர்களின் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல்பட்டேல் மீதான வழக்குகளை சிபிஐ ரத்து செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கடும்விமர்சனம் செய்துள்ளது. இதுவரை பிரபுல்பட்டேல் மீது குற்றம் சாட்டிய பா.ஜ, இப்போது மோடி வாஷிங் மெஷின் மூலம் அவரை சுத்தம் செய்துவிட்டதாக கேலி செய்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஊடகம் மற்றும்விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜவில் இணைந்தால், வழக்குகள் முடிக்கப்படும் என்ற கொள்கையுடன் செயல்படும் மோடி வாஷிங் மெஷினை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த வாஷிங் மெஷின் விலை ரூ.8500 கோடி என்று தெரிவித்தார். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ வாங்கிய நிதி ஆகும்.

மோடி வாஷிங் மெஷின் பற்றி பவன் கேரா கூறியதாவது: நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்து இருப்பது முழுமையான தானியங்கி வாஷிங் மெஷின் ஆகும். பா.ஜவில் சேருங்கள், வழக்குகள் முடிக்கப்படும் என்ற கொள்கை அடிப்படையில் இந்த வாஷிங் மெஷின் செயல்படுகிறது. ஊழல், மோசடி போன்ற அழுக்கு டி-ஷர்ட் இயந்திரத்திற்குள் சென்றால் சுத்தமான டி-ஷர்ட் வெளிவரும். இது பாஜவின் மோடி வாஷ் ஆகும். இந்த மோடி வாஷிங் மெஷினின் விலை ரூ. 8,500 கோடி. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சி பெற்ற பணம். இந்த வாஷிங் மெஷின் அனைத்து வகையான ஊழல் கறைகளையும் சுத்தம் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மோடி வாஷிங் பவுடர் மட்டுமே பயன்படும். பிரதமரின் படத்துடன் கூடிய மோடி வாஷிங் பவுடர் அனைத்து கறைகளையும் ஒரு நொடியில் அகற்றிவிடும்.

அந்த வகையில் தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல் மீதான ஊழல் கறையை மோடி வாஷிங் மெஷின் அகற்றி உள்ளது. 2014ல் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது பா.ஜ தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டில் ஏர் இந்தியா ஊழலும் ஒன்று. அப்போது ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரை ஏர்இந்தியாவில் ஊழல் நடந்ததாக பா.ஜ குற்றம் சாட்டியது. 2006ம் ஆண்டு ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் பல விமானங்களை ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்ததாக சிபிஐயும் குற்றம் சாட்டியது.

இது மட்டுமின்றி, 2019ம் ஆண்டில், 1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி இக்பால் மிர்ச்சியுடன் இணைந்து பிரபுல்பட்டேல் சொத்து பேரத்தில் ஈடுபட்டார் என்று பாஜ சில மோசமான குற்றச்சாட்டுகளை கூறியது. உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தப்பியோடிய மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான இக்பால் மிர்ச்சிக்கும், பிரபுல்பட்டேலுக்கும் இடையே நிலம் பேரம் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா அப்போது காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொண்டார். ஆனால் இப்போது அந்த அபத்தமான குற்றச்சாட்டு என்ன ஆனது என்று நாங்கள் பா.ஜவை கேட்கிறோம்.

பிரபுல் பட்டேல் மட்டுமல்ல, பா.ஜ இதுவரை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னர், குறைந்தது 21 முக்கிய தலைவர்கள் பா.ஜவில் இணைந்ததும் அல்லது பா.ஜ கூட்டணியில் இணைந்ததும் மோடி வாஷிங் மெஷின் மூலம் வெள்ளையாக்கப்பட்டு, சுத்தமாக்கப்பட்டுள்ளனர். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா மாநில மூத்த அரசியல் தலைவர்கள் நாராயண் ரானே, அஜித் பவார், சாகன் புஜ்பால், அசோக் சவான் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை பாஜவால் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் அதைப் பற்றி பேசுவதை அவர்கள் நிறுத்தி விட்டார்கள்.

அதே போல் பிரபுல் பட்டேல் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த பலர் மீது பாஜ 2014ல் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்தது. இப்போது பா.ஜவில் சேர்ந்தவுடன் அவர்கள் அனைவரும் சுத்தமாகி விட்டனர். அப்படியானால் பா.ஜ குற்றம் சாட்டியது உண்மையா இல்லையா? அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு மீது சேறு பூசுவதற்காக மட்டுமே செய்யப்பட்டதா? அல்லது பாஜவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்களை மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? மோடி- அமித்ஷா கூட்டணியில் எதுதான் உண்மையாக இருக்கிறது?

பிரதமர் மோடி சமீபத்தில் உறுதியான நீதித்துறை பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சித்தார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இப்போது விசாரணை அமைப்புகளை அவர்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளனர் என்று வெளிப்படையாகக் கூற முடியுமா? கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிபிஐ உள்ளது. மிரட்டி பணம் பறிக்கும் அமைப்பாக அமலாக்கத்துறை இயக்குநரகமும், வருமானத்தை நிறுத்தும் அமைப்பாக வருமானவரித்துறையும் மாறி உள்ளது. 2014 தேர்தல் அறிக்கையில் இதே மோடி தான் ஊழலுக்கு எதிராக நான் போராடுவேன் என்று சபதம் செய்தார்.

மோடி பேசிய இந்த ஊழல்கள் அனைத்தும் போலியானவை என்று காங்கிரஸ் எப்போதும் கூறி வந்தது. இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் இருப்பவர்களின் கைப்பொம்மையாக இருந்த அப்போதைய மத்திய கணக்கு தணிக்கைக்குழு தலைவர்(சிஏஜி) வினோத் ராய் அளித்த அனைத்து அறிக்கைகளும் போலியானவை. ஆனால் இந்த ஏஜென்சிகளின் ஒவ்வொரு அதிகாரியையும் விருப்பத்துடன் தேடிச் செல்வோம். நமது ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கட்சியாக மாறுங்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.

* தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்துவிடும்
பவன் கேரா கூறுகையில்,’நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜவில் இணைந்தால் அடுத்த நொடியே அவர் குற்றமற்றவர் ஆகிவிடுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் கூட பாஜவிடம் உள்ளது. அவரை பாஜ வாஷிங் மெஷினின் உள்ளே வைத்தால், வெளியே வரும்போது மாநிலங்களவை எம்பியாக கூட வரலாம்’ என்று கிண்டலாக தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,’நமது ஜனநாயகம் மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டத்தை குழிதோண்டிப் புதைக்கும் இந்த விசாரணை அமைப்புகளின் ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் கண்டிப்பாக தண்டிப்போம்’ என்றார்.

The post எதிர்க்கட்சியில் இருந்தால் ஊழல்..பா.ஜவில் சேர்ந்ததும் நற்சான்றிதழ்: 21 தலைவர்களை சுத்தமாக்கிய மோடி வாஷிங் மெஷின்; விலை ரூ.8500 கோடி தான்; கேலி செய்த காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Congress ,New Delhi ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...