×

வாக்காளர்களுக்கு ரூ.2000 லஞ்சம் வழங்கிய ஓபிஎஸ்: பெண்களுக்கு ரூ.50 விநியோகித்த அதிமுக வேட்பாளர்; பூசாரிக்கு பணம் கொடுத்த நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோனை கூட்டம் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வந்த வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று திருமண மண்டப வாசலில் பெண்கள் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டை பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் 4யை (2000) எடுத்து ஒரு பெண்ணிடம் வழங்கினார். அந்த பெண்ணிடம் ஆரத்தி எடுத்த 4 பேரும் இந்த பணத்தை பகிர்ந்து கொள்ள சொன்னார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல், கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணிக்கு பிரசாரம் தொடங்க இருந்தார். ஆனால் அங்கு வேட்பாளர் தங்கவேல் பிரசாரத்திற்கு வருவதற்கு 2 மணி நேரம் தாமதமானதால் டென்ஷனான விஜயபாஸ்கர் காலை 9 மணிக்கு வேட்பாளர் இல்லாமல் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பிரசாரத்தில் கலந்துகொண்டு ஆரத்தி தட்டு வைத்திருந்த பெண்களுக்கு தலா ரூ.50 அதிமுக நிர்வாகி வாங்கினார். அப்போது அந்த பெண்கள் தாங்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொளுத்தும் வெயிலில் காத்திருந்து ஆரத்தி எடுத்த எங்களுக்கு வெறும் ரூ.50 மட்டும் தானா என கேட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ஈசான விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய போது கோயில் பூசாரிக்கு பணம் வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்கள் பொது இடத்தில் பொதுமக்களுக்கு பணம் வழங்கினால் அது ஓட்டுக்கு பணம் வழங்குவதாகி விடும். எனவே பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் தேர்தல் விதிப்படி பணம் வழங்குவது தேர்தல் விதிமுறை மீறலாகும். ஆனால் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பூசாரிக்கு பணம் வழங்கியதோடு அவர் அருகில் இருந்த பிற பாஜ நிர்வாகிகளும் பூசாரிக்கு பணம் வழங்கிய காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே பாஜ மாநில தலைவர் அண்ணாமலைபெண் ஒருவர் ஆரத்தி எடுத்தபோது பணம் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவை கலெக்டரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாஜ வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் பணம் வழங்கி அடுத்தடுத்து சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாக்காளர்களுக்கு ரூ.2000 லஞ்சம் வழங்கிய ஓபிஎஸ்: பெண்களுக்கு ரூ.50 விநியோகித்த அதிமுக வேட்பாளர்; பூசாரிக்கு பணம் கொடுத்த நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.

Tags : OPS ,ADMK ,Nayanar Nagendran ,National Democratic Alliance Party ,Aranthangi, Pudukottai district ,Ramanathapuram ,Aranthangi-Peravoorani road ,O. Panneerselvam ,AIADMK ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல்...