×

பாஜவின் விஷ விதைகளை அழிக்க போதும் மோடி… பை பை மோடி… நவீன மனிதர்கள் பிரசாரம்

திருப்பூரில் எந்தவித அரசியல் அமைப்பும் இல்லாமல் ‘நவீன மனிதர்கள்’ என்ற அமைப்பினர் மதவெறி சக்திகளுக்கு எதிராக தனித்து நின்று முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் குமரன் சிலை முன்பு நவீன மனிதர்கள் அமைப்பினர் நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜவுக்கு எதிராக “போதும் மோடி.. பை பை மோடி’’ என்ற பதாகையை ஏந்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் கூறுகையில்,`திருப்பூரில் நவீன மனிதர்கள் அமைப்பை நாங்கள் உருவாக்குவதற்கு காரணம் மத வெறுப்புணர்வு பிரசாரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக சகோதரத்துவம் குறைந்து வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் மத்தியில் அன்பை போதிக்க வேண்டும். மக்களுடைய அரசியல் சிந்தனையும், சமூக சிந்தனையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜ தனது நேர்மையான நேர்மையற்ற அனைத்து சக்திகளையும் ஒன்றாக காட்டுகிறது. எனவே, இந்த சூழலில் கட்டாயம் பிரசாரத்தில் இறங்க வேண்டியுள்ளதால் நாங்கள் தற்போது இதனை கையில் எடுத்துள்ளோம். திருப்பூர் மட்டுமின்றி பாஜ ஆளுமை செலுத்தும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று இந்த பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபடுவோம். திருப்பூரில் பாஜ விஷ விதைகளை தூவியுள்ளது. அதனை அகற்றவே நாங்கள் நவீன மனிதர்களாக இங்கு வந்துள்ளோம். கட்சி சார்பாக வரவில்லை’’ என்றார்.

* அதிமுகவுக்கு போடும் ஓட்டு நம்பியாருக்கு போடும் ஓட்டு: பாமக வேட்பாளர் கலாய்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பாஜ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ நிர்வாகி டாக்டர் மதன் பேசுகையில், அதிமுக கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுவதாகவும், திமுக சார்பில் எஸ்டிபிஐ வேட்பாளர் போட்டியிடுவதாகவும் என மாற்றி கூறினார். பின்னர் பாமக வேட்பாளர் திலகபாமா பேசுகையில், ‘‘இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் அது எம்ஜிஆருக்கோ, ஜெயலலிதாவிற்கு போடும் ஓட்டு அல்ல. அது நம்பியாருக்கு போடும் ஓட்டு. இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்’’ என்றார்.

* ‘நான் பபூன்தாங்க… ஆனால் அவர் வில்லன் வீரப்பா..’ அன்று வீட்டு காவல் நாயா இருந்தோம்… இன்று சீறும் சிங்கமாக மாறி விட்டோம்… டிடிவி பேச்சுக்கு ஆர்பி.உதயகுமார் பதிலடி
மதுரை மாவட்டம், வாடிபட்டியில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் தான் டிடிவி.தினகரன். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னரே அவர் தமிழ்நாட்டில் தலை காட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகர் மக்களிடத்தில் இருபது ரூபாய் நோட்டை காட்டி ஏமாற்றி அதன் பின் தொகுதி பக்கமே செல்லவில்லை.

மீண்டும் அங்கே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கும் மக்கள் அவரை நம்பவில்லை. அவரைப் புறக்கணித்து தோல்வியடைய செய்தார்கள். இப்போது கடைசி புகலிடமாக தேனி நாடாளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் அவர் இங்கு பெரிய வீராப்புடன் சுற்றி வருகிறார். அந்த வீராப்பெல்லாம் இங்கு எடுபடாது. டிடிவி.தினகரன் என்னை பபூன் என கூறுகிறார். நான் பப்பூனாக இருந்து கொள்கிறேன். பபூனால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால் டிடிவி.தினகரன் வில்லன் பி.எஸ்.வீரப்பா. அந்த வில்லனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும். இங்கு அதிமுக வேட்பாளர் கதாநாயகன், நான் பபூன். நாங்கள் இருவரும் கிளைமாக்சில் ஜெயித்து விடுவோம்.

ஆனால் வீரப்பா பெரா வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று விடுவார். நாங்கள் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது டிடிவி.தினகரனை கண்டு பயந்தது உண்மைதான், அவர் வீட்டு காவல் நாயாக கூட இருந்தோம். ஆனால் இப்போது அதிமுக தொண்டர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். உங்களிடமிருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும் இயக்க தொண்டர்களும் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறோம். இனியும் எங்களை சீண்ட வேண்டாம். இப்போது அனைவரும் சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அலங்காநல்லூரில் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக இன்று பல அணிகளாக பிரிவதற்கு ஆர்.பி.உதயக்குமார் என்ற பபூன் தான் காரணம் என விமர்சித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தற்கொலைக்கு சமம் என்றவர் இன்று பாஜவுடன் கூட்டணி
உதயக்குமார் கூறுகையில், ‘பாஜவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியுடன் எப்படி கூட்டணி வைப்பேன் எனக் கூறிய டிடிவி.தினகரன், தற்போது எப்படி பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார்? அவர் இனியாவது தனது வாய் சவடாலை குறைத்துக் கொள்ள வேண்டும். வாய் சவடாலால் வீணாய் போனவர் அவர்தான்’ என்றார்.

* பிரசாரத்தில் சண்டை வேண்டாம்; எம்ஜிஆர், நம்பியார் மாதிரி ஆக்கிடாதீங்க; திண்டுக்கல் சீனிவாசன் லக..லக…
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கும் போட்டியிடுகின்றனர். நேற்று வேட்பாளர் சச்சிதானந்தம், திண்டுக்கல் குருநகர் பகுதியில் வாக்குகள் சேகரிக்க பிரசார வேனில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேட்பாளர் முகமது முபாரக்குடன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து கொண்டிருந்தார். எதிர்பாராவிதமாக இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மைக்கில் திண்டுக்கல் சீனிவாசன் இருதரப்பு தொண்டர்களையும் பார்த்து பேசுகையில், ‘ஐயா… சண்டை இல்லாமல் ஒதுங்கி போங்கப்பா. உங்கள் வீரத்தை எல்லாம் எம்ஜிஆர், நம்பியார் போன்று காட்ட வேண்டாம், கொஞ்சம் பாதையை விடுங்கள் நாங்கள் ஒதுங்கி சென்று விடுகிறோம். ஏய் வண்டிய எடுப்பா’ என்றார். மேலும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தின் பிரசார வாகனம் அருகில் வந்தவுடன் திண்டுக்கல் சீனிவாசன், ‘நல் வாழ்த்துக்கள். நமக்குள் சண்டை வேண்டாம். ஒதுங்கி போய் விடுவோம். ஆதரவு கேட்போம். மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்’ எனக் கூறி கைகூப்பி வணக்கம் செலுத்தி அங்கிருந்து சென்றார்.

The post பாஜவின் விஷ விதைகளை அழிக்க போதும் மோடி… பை பை மோடி… நவீன மனிதர்கள் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Tirupur ,Naveena Bhanni ,Dinakaran ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...