×

நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல் பாஜ வேட்பாளர்கள் மீது வழக்கு

சென்னை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் கடந்த 26ம் தேதி குண்டம் விழா நடைபெற்றது. இதில், ஒன்றிய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பாஜ வேட்பாளருமான எல்.முருகன் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தார். பின்னர், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜவினருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. இதுகுறித்து பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் பாஜ வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே தேர்தல் விதிமுறைகளை மீறியதால் எல் முருகன் மீது 2 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் வசந்தராஜன் நேற்று முன் தினம் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி ஏராளமான பைக் மற்றும் வாகனங்களில் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால் வசந்தராஜன், பாஜ நிர்வாகிகள் ஜான்சன், பிரகாஷ், உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் செந்தில்நாதன் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். வடமதுரை பஸ் நிறுத்தம் பகுதியில் பிரசாரம் செய்யும்போது திண்டுக்கல் மாவட்ட பாஜ தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்பி கடந்த 5 வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்து, குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றினார் என்று கூறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்குவதாக கூறி ரூ.500 நோட்டு கட்டு ஒன்றை காட்டி பேசினார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர், வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ கிருஷ்ணவேணி, பாஜ வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மாவட்ட பாஜ தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல் பாஜ வேட்பாளர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Pollachi ,Dindigul ,BJP ,Chennai ,Gundam ,Pannari Mariamman temple ,Sathyamangalam ,Erode district ,L. Murugan ,Union ,Minister ,Nilgiri Parliamentary Constituency ,Amman ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...