×

சேலத்தில் கடை வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்: வியாபாரிகள், பெண்கள் உற்சாக வரவேற்பு

சேலம்: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று காலை சேலம் கடைவீதிகளில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து, திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் நேற்று முன்தினம் இரவு, தர்மபுரியில் பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இரவு சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். நேற்று காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதிகளில் நடந்து சென்று, திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

முதல் அக்ரஹாரம், கடைவீதி ஆகிய பகுதிகளில், காலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முதல்வரை பார்த்ததும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அவர்கள் முதல்வருக்கு கை கொடுத்தும், அவருடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அக்ரஹாரம் பகுதியில் சாலையின் இருபகுதியிலும் இருந்த மக்களிடம், முதல்வர் வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அன்போடு வரவேற்றனர். ராஜகணபதி கோயில் அருகில் பூ வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர், முதல்வருக்கு மாலை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உதவித்தொகை வருகிறதா? என கேட்டார்.

பெண்களும் சரியான நேரத்தில் ₹1000 வருகிறது. இந்த பணம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது’ என கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். சிலர் அவரிடம் குறைகளையும் தெரிவித்தனர். அந்த குறையை உடனடியாக சரி செய்யுமாறு, மாவட்ட திமுக செயலாளரான ராஜேந்திரன் எம்எல்ஏவிடம் முதல்வர் கூறினார். கடைவீதி வழியாக வாக்கு சேகரித்து வந்த முதல்வர், கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனீர் அருந்தினார். அவருடன் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, பார்த்திபன் எம்பி ஆகியோரும் டீ குடித்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர், பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்.

The post சேலத்தில் கடை வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர்: வியாபாரிகள், பெண்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Salem ,DMK ,M.K.Stalin ,DM Selvaganapathy ,Tamil Nadu ,
× RELATED சேலம் மாவட்டம் ஏற்காடு...