×

ஐபிஎஸ் படித்த அண்ணாமலை அநாகரிகமாக பேசுவது நியாயமா? மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன்

1.இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் எதை நோக்கி இருக்கும்?

பதில்: மநீமவின் குரல் தமிழ்நாட்டின் நலன் கருதியே இருக்கும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும், மாநில சுயாட்சி பறிக்கப்படுவதும், இன்றைக்கு மாநிலங்களுக்கான தேவைகளை ஒன்றிய அரசு புறக்கணிப்பதானாலும், நமது பண்பாட்டை, சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக மத்தியில் ஆளுகின்ற பாஜ அரசு மீண்டும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பிரசாரத்தை தான் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.

2.சுதந்திரத்துக்கு முன்பு கிழக்கு இந்திய கம்பெனி நாட்டை கொள்ளையடித்தது போன்று இப்போது மேற்கு இந்திய கம்பெனி(குஜராத்) நாட்டை கொள்ளைடிக்கிறது என்று கமல்ஹாசன் விமர்சித்துள்ளாரே?

பதில்: இந்தியா முழுவதும் அவர்கள் பிடிக்குள் வந்து விட்டது என்ற பிரமிப்புடன் தான் பாஜவின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர்கள் நோக்கம் இப்போது தமிழ்நாடாகத்தான் இருக்கிறது. எவ்வளவு தூரம் தமிழ்நாட்டை முடக்க முடியும், அச்சுறுத்த முடியும், சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு எப்படி எல்லாம் அச்சுறுத்த முடியுமோ? அதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு சுதந்திரமாக செயல்படக்கூடாது என்ற நோக்கத்தோடு ஒன்றிய பாஜ அரசு நடக்கிறது. அதுபோன்ற நிலமை ஒருநாளும் வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் பாரதியின் வார்த்தை படி நாங்கள் சண்டையே போட்டாலும் நாங்கள் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள். அடிப்போம் சேர்ந்து கொள்ளுவோம். மக்களுக்கு விரோதமானவர்கள் அந்நியர்கள் தானே?. அந்த நோக்கத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியை போன்று மேற்கு இந்திய கம்பெனியை விட்டுவிடக் கூடாது என்பதை கமல்ஹாசன் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

3.இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, பிஞ்சு போன செருப்பு என்று அண்ணாமலை பேசியது குறித்து?

பதில்: பிஞ்சு போன செருப்பு என்று, போராட்டத்தை சொல்கிறாரா? இந்தியை சொல்கிறாரா? என்று தெரியவில்லை. எப்போதுமே அவர் இந்த பக்கமும் இல்லாமல் அந்த பக்கமும் இல்லாமல் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறார். எந்த மொழிக்கும் தமிழர்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால் கட்டாயமாக திணிக்கும் போது அதை எதிர்க்கிறோம். இந்தியை திணிக்காதீர்கள், விருப்பப்பட்டால் கற்றுக் கொள்வோம் என்று தான் சொல்கிறோம். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் பொது வெளியில் வந்து செருப்பு…. என்று பேசுவது ஒரு மாநில தலைவராக, ஒரு ஐபிஎஸ்சாக இருந்து கொண்டு அந்த வார்த்தைகளை சொல்வது நியாயமாக தெரியவில்லை. நாகரிகமான வார்த்தைகளை அவர் இனி பிரயோகப்படுத்த வேண்டும். இதை ஐபிஎஸ் புரிந்து கொண்டால் நல்லது.

4.இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நீங்கள் செய்யக்கூடிய பிரசாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

பதில்: மாநிலங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகளும், நெருடல்களும், சின்ன சின்ன குறைபாடுகளும் இருக்கலாம். இன்னொருத்தனை உள்ளே விட்டு எப்படி வேடிக்கை பார்க்க முடியும். வீட்டுக்குள் இருக்கக்கூடிய சின்ன பிரச்னையை நாம் சரிபண்ணலாம் என நினைத்துக் ெகாண்டிருக்கும் போது, வீடே பறிபோகும் நிலை இப்போது வந்து விட்டது. முதலில் அதை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நலன் தரக்கூடிய எதற்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம். இப்போது ஒன்றிய பாஜ அரசை அகற்றினால் தான் மக்கள் நலனை பாதுகாக்க முடியும் என்பதனால் நாங்கள் திமுக உடன் கைகோர்த்து ஒரு வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணியை வெற்றி பெற வைப்பதே எங்கள் நோக்கம். அதற்காகத் தான் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நிகராக மநீம தொண்டர்கள் கள பிரசாரத்தில் உள்ளனர். மக்கள் நலனும், மாநில நலனும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் மக்கள் நீதி மய்யம் மக்களின் குரலாக ஒலித்துக் ெகாண்டே இருக்கும்.

The post ஐபிஎஸ் படித்த அண்ணாமலை அநாகரிகமாக பேசுவது நியாயமா? மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,People's Justice Center ,State Secretary ,Poet Sinegan ,Manima ,Tamil Nadu ,Union government ,Neeti Maiyam ,State ,Poet Sinekan ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...