×

தேர்தல் பத்திரம் ரத்தாவதற்கு 3 நாள் முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க ஒன்றிய அரசு அனுமதி: ஆர்டிஐ மனுவில் தகவல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் சட்டம் ரத்தாவதற்கு 3 நாட்கள் முன்பாக, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க ஒன்றிய நிதி அமைச்சகம் அனுமதி தந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ல் கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வெளியான 3 நாட்களுக்கு முன்பு, தலா ரூ.1 கோடி மதிப்பிலான 10 ஆயிரம் தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி கழகத்திற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும், தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து சுமார் 2 வாரத்திற்கு பிறகு தான், அதாவது பிப்ரவரி 28ம் தேதிதான் தேர்தல் பத்திரங்களை அச்சடிப்பதை நிறுத்துமாறும், அதன் செயல்பாடுகளை நிறுத்துமாறும் எஸ்பிஐ வங்கிக்கு நிதி அமைச்சகம் தகவல் அனுப்பி உள்ளது. அதற்குள், 8,350 தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டு எஸ்பிஐ வங்கிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. மீதமுள்ள 1,650 பத்திரங்களை அச்சடிக்கும் பணியை நிறுத்திவிடுமாறு எஸ்பிஐ தரப்பில் பாதுகாப்பு அச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் எஸ்பிஐ வங்கி மூலம் விற்கப்பட்டு பணமாக்கப்பட்டதில், அதிகபட்சமாக பாஜ ரூ.8,451 கோடி நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் ரூ.1,950 கோடி; திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,707.81 கோடி, பிஆர்எஸ்) ரூ.1,407.30 கோடி நிதியை தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளன.

The post தேர்தல் பத்திரம் ரத்தாவதற்கு 3 நாள் முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க ஒன்றிய அரசு அனுமதி: ஆர்டிஐ மனுவில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,RTI ,New Delhi ,Union Finance Ministry ,Union BJP ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை