×

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்; சேலத்தில் எப்படி செல்வகணபதியின் குரல் ஒலிக்கிறதோ, அப்படியே நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். சேலத்தில் திரண்டுள்ள மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது திமுக வேட்பாளர்களின் வெற்றி கண்கூடாக தெரிகிறது.

திமுக 3 ஆண்டுகளாக நடத்திவரும் நல்லாட்சியே தமிழ்நாட்டில் உண்மையாக நடக்கும் மக்களாட்சி. திராவிட மாடலின் குரல் தெற்குக்கு மட்டுமல்ல; வடக்கிலும் ஒலிக்கிறது; வடக்கிற்காகவும் ஒலிக்கிறது. ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம் தான் எடுத்துக்காட்டு. ஒரு ஒன்றிய அரசு எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக அரசுதான் எடுத்துக்காட்டு. சில நாட்களுக்கு முன் சேலம் வந்த பிரதமர் மோடி, நாங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக பேசியிருந்தார். உண்மையில் பாஜகவால் தூக்கத்தை தொலைத்தவர்கள் மக்கள்தான்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர். கேஸ் விலை உயர்வால் ஏழை எளிய பெண்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர். வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தூக்கத்தை தொலைத்தனர். தொழிலாளர் திருத்த சட்டங்களால் தொழிலாளர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டனர். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த நாடே தூக்கத்தை தொலைத்துவிட்டது. மக்களின் தூக்கம், நிம்மதியை கெடுத்து ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, தேர்தல் பத்திர ஊழலால் தூக்கத்தை தொலைத்துவிட்டார்.

முன்பு பாஜகதான் வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது; தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு அது மாறியுள்ளது. தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு வடமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது என நிலைதான் உள்ளது. தூக்கத்தை தொலைத்துவிட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக வருமான வரித்துறையை ஏவிவிடுகிறார். எதிர்க்கட்சிகளை சேர்ந்த டெல்லி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் மீது ஈ.டி., சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவுவதன் மூலம் உச்சகட்ட தோல்வி பயத்தில் பிரதமர் மோடி இருப்பது தெரிகிறது.

இந்திய ஜனநாயகத்தையே பிரதமர் மோடி சீரழித்து கொண்டிருக்கிறார்; தோல்வி பயம் காரணமாகவே நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்காததால்தான் ஆளுநர், தற்போதைய எம்எல்ஏ போன்றவர்களை வேட்பாளர்களாக பாஜக நிறுத்தியுள்ளது. நோட்டாவைவிட கீழே போய்விடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் தெரிந்த முகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா ஆட்சியை ஊழல் மிகுந்த ஆட்சி என விமர்சித்தவர்தான் பிரதமர் மோடி.

டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஜெயலலிதா, எம்ஜிஆரை பாராட்டுகிறார் பிரதமர். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் பாஜகவிடம் சமூக நீதி பேசும் ராமதாஸ் சரணடைந்துள்ளார். கடந்த 3 தேர்தல்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. இத்தனை ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி உள்ளபோதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ராமதாஸ் வலியுறுத்தாதது ஏன்?. 3 முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்தித்தபோது பாமகவின் வலிமை எங்கே போனது?. மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஜெயலலிதாவும் சோனியாவும்தான் என்று குற்றம்சாட்டியவர்தான் பிரதமர் மோடி.

சேலத்தில் பேசிய பிரதமர் மோடி, பெண் சக்தி குறித்தும் பேசியுள்ளார். பெண் சக்தி குறித்து பேசும் பிரதமர் மோடி, பெண்களுக்காக காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நிர்பயா திட்டத்தை செயல்படுத்தவில்லை. நிர்பயா திட்டத்துக்கான நிதியைக்கூட மோடி அரசு முறையாக ஒதுக்கவில்லை. பாஜக எம்பியால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கொடுமை மோடி ஆட்சியில் தான் நடந்தது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் தீ வைத்து எரித்ததும் பாஜக ஆட்சியில்தான் நடந்தது. பெண் சக்தி குறித்து பேச பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தகுதி இருக்கிறது?.

தமிழ்நாட்டை புண்ணிய பூமி என்று சொல்லும் பிரதமர் மோடி, வெள்ளத்தின்போது ஏன் வரவில்லை? மக்களை மதரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் பிரித்து வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறது பாஜக. பாஜகவின் எண்ணம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் நிறைவேறாது. தமிழ்நாடு பெரியார் பண்படுத்திய மண், அண்ணாவால் கட்டமைக்கப்பட்ட மண், கலைஞரால் வளர்க்கப்பட்ட மண். திமுக இருக்கும்வரை பாஜகவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தாய்மொழி தமிழாக இல்லையே என நேற்று மாலை கூறினார் பிரதமர் மோடி. எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்பதை பாஜக ஆட்சி உருவாக்கி விட்டது.

நேற்று காலை தமிழ் வானொலியை ஆகாசவாணி என மாற்றியுள்ளார் பிரதமர் மோடி. காலையில் இந்தியை திணித்துவிட்டு மாலையில் தமிழ் மீது பாசம் காட்டுவது என்ன மாதிரியான பாசம்?. திமுக மீது எவ்வித ஆதாரங்களும் இன்றி பொத்தாம் பொதுவாக விமர்சனங்களை முன்வைக்கிறார் பிரதமர் மோடி. குறைந்தபட்சம் மணிப்பூர் முதலமைச்சரையாவது பதவி விலகச் செய்திருக்கலாமே?. பிரதமர் மோடியைப் போல் ஆதாரம் இல்லாமல் நான் பேசமாட்டேன்; ஆதாரங்களுடன் மட்டுமே பேசுவேன்; ஏனென்றால் நான் கலைஞரின் மகன். பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியலே எனது கையில் உள்ளது.

32 பக்கங்கள் கொண்ட பட்டியலில் உள்ள அனைத்து ரவுடிகளும் பாஜகவில் உள்ளனர். அனைத்து ரவுடிகளையும் பாஜகவில் வைத்துக்கொண்டு சட்டம், ஒழுங்கை பற்றி பேசலமா?. மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது – முதலமைச்சர்போதைப்பொருள் வழக்கில் சிக்கிய வழக்கில் அடுத்த நொடியே கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதைப் போல் அவதூறு பிரச்சாரம் செய்வது பிரதமர் பதவிக்கு அழகல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குஜராத் வழியாகத்தான் போதைப்பொருள் வருவதாக செய்திகள் வருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப்பொருள் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு முன்வைத்த புள்ளிவிவரங்களிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது. அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி தமிழ்நாட்டு மக்களையும் இளைஞர்களை பற்றியும் அவதூறு செய்வது ஏன்?. போதைப்பொருள் அதிகளவில் பிடிபடும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆள்பவை; தமிழ்நாடு அந்த பட்டியலில் இல்லை. சாதனைகளை சொல்ல வழியில்லாததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் பிரதமர் மோடி.

தேய்ந்துபோன பழைய ரெக்கார்டு போல திமுகவை பற்றியே குறை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவை பற்றி ஏன் பேசவில்லை என்றாலும் திமுக, திமுக என்றே பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. பழைய எஜமான விசுவாசம் பழனிசாமியை தடுக்கிறதா?. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, டிஜிபி மீதே குட்கா வழக்கு போன்றவைதான் எடப்பாடி ஆட்சியின் அவலங்கள். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது, கல்வி வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியது திமுக ஆட்சியில்தான். போலியான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட மோடி மாடல் தற்போது அம்பலமாகி விட்டது.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட திராவிட மாடலே முன்மாதிரியாக திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் தனியார் துறைகளில் 78 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளோம். திட்டங்களால், செயல்பாடுகளால் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது திராவிட மாடல் ஆட்சி. தாய்வீட்டு சீர் போன்று எங்களின் சகோதரர் ஸ்டாலின் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குகிறார் என்று தாய்மார்கள் கூறுகிறார்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் 1.15 கோடி குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளன. மாநிலம் முழுவதும் பேருந்துகளில் 445 கோடி முறை இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

3 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பார்த்துப் பார்த்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியால் இப்படிப்பட்ட சாதனைகளை பட்டியலிட முடியுமா?. சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் இவ்வாறு கூறினார்.

The post பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப்பொருள் அதிகமாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Mu. K. Stalin ,Salem ,Chief Minister ,MLA ,K. Stalin ,Salem Bethanayakanpalayam ,Dimuka ,Selvaganapathy ,Kallakurichi ,Malaiarasan ,Mu K. Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...