×

தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசையின் வெற்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும்: அண்ணாமலை தீவிர பிரசாரம்

சென்னை: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். ‘அக்காவுக்கு வாக்களியுங்கள்’ என்ற தமிழிசையின் பிரசாரம் பெண்கள் மத்தியில் அவருக்கு பெருத்த வரவேற்பை கொடுத்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைத்தே தீருவேன் என்று உறுதி அளித்து வருகிறார்.

பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழிசை சவுந்திரராஜனை ஆதரித்து விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் விநாயகர் கோயில் அருகே தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பாஜ தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஒரு அக்கறையோடு அரசியலுக்கு வந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். பெரிய அரசியல் பாரம்பரிய குடும்பம். அதிலே அரசியல் பயின்றவர்.

மருத்துவராக இருந்து படிப்படியாக முன்னேறி வருபவர். மாநில தலைவராக இருந்த போது தாமரை மலர்ந்தே தீரும் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர். இரு மாநில ஆளுநராக இருந்து இன்று சாதாரண ஒரு பெண்ணாக நம்மோடு களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அதனால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உயரிய இடத்துக்கு சென்று விட்டு இன்று சாதாரண பெண்ணாக உங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறார். இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அவரது வெற்றி இருக்கும். அது, தமிழக அரசியலில் ஒரு புதிய சரித்திரமாக இருக்க போகிறது என்றார்.

பிரசாரத்தில், பாஜ மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாசன், பாமக அமைப்பு செயலாளர் தயாளன், மாவட்ட தலைவர் முத்துக்குமார், தமாகா மாவட்ட தலைவர் சத்தியநாராயணன், ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் எம்.எம்.பாபு மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடன் சென்றனர்.

The post தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசையின் வெற்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும்: அண்ணாமலை தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : South Chennai BJP ,Tamilisai ,India ,Annamalai ,CHENNAI ,Tamilisai Soundrarajan ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...