×

இந்தி எதிர்ப்பை ‘பிஞ்சு போன செருப்பு’ என்பதா?… அண்ணாமலை பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

ஸ்ரீபெரும்புதூர் : இந்தி எதிர்ப்பை பிஞ்சு போன செருப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பங்கேற்றது. மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்புடன் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 70 பேர் வரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்த போராட்டத்தை அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசியதற்கு கண்டனம் வலுக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர், வேணுகோபாலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என பேசிக் கொண்டிருக்கிறது திமுக. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை.” எனக் கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றிணைந்து நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, “பாஜகவுக்கு தமிழ்நாடு மீதோ, தமிழ் மொழி மீதோ மரியாதை கூட இல்லை. தாய் மொழியாக தமிழ் தனக்கு கிடைக்கவில்லை என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசுகிறார். மறுபுறம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பிஞ்ச செருப்பு என்று நாங்கள் எதையெல்லாம் தூக்கி எறிந்தோமோ, அதனால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு வரி செலுத்துவதால்தான் இந்தியை தூக்கிப் பிடிக்கும் உத்தரப் பிரதேசத்தில் சாலைகள் போடப்படுகின்றன. உ.பி.யில் சாலை போட வேண்டுமென்றால் இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிஞ்ச செருப்புகளை தூக்கி எறிந்துதான் ஆக வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post இந்தி எதிர்ப்பை ‘பிஞ்சு போன செருப்பு’ என்பதா?… அண்ணாமலை பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Earth ,Sriperumbudur ,BJP ,president ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...