×

நான் என்னும் அகங்காரம்

ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்னை உண்டாயிற்று. கட்டை விரல், ‘‘நான்தான் முக்கியம், என் உதவிஎல்லோருக்கும் தேவை’’ என்று பெருமையுடன் கூறியது. அடுத்த விரல், ‘‘என்னைக் கொண்டே எல்லோரும் சுட்டிக் காட்டுவதால், எனக்கு ஆள்காட்டி விரல் என்ற பெருமை உண்டு’’ என்று கூறியது. நடுவிரலுக்கு மிகவும் கோபம், ‘‘எல்லோரையும்விட நானே உயரமானவன்’’ என்று இறுமாப்புடன் கூறியது. நான்காவது விரல் அமைதியாக, ‘‘உங்களில் எவருக்கும் இல்லாத பெருமை எனக்கு மட்டுமே உண்டு. தங்க மோதிரத்தையோ வைர மோதிரத்தையோ என்மீது போடுவதால், மோதிர விரல்’’ என்ற மதிப்பு எனக்கே உண்டு என்று அமைதியாகக் கூறியது. ஐந்தாவது விரலான சுண்டு விரல், வணக்கம் என்று சொல்லி ஒருவரை வணங்கினாலும், அல்லது கடவுளை வணங்கினாலும், எப்போதும் நான்தான் முதலில் நிற்கிறேன். நீங்கள் நால்வரும் எனக்குப் பின்னே அல்லவா நிற்கிறீர்கள்?’’ என்று கூறியது.

பிரச்னை முடிவாகவில்லை. ஒவ்வொரு விரலும் தங்கள் அருமை பெருமைகளை பட்டியலிட்டு தங்களை உயர்ந்தவராக நிரூபிக்க போட்டியிட்டுக் கொண்டிருந்தது.அவ்வேளையில், சாலையில் சென்ற வியாபாரி, `லட்டு.. லட்டு..’ என்று கூறிக் கொண்டிருக்க, மறுவினாடி சத்தமின்றி ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்து அவரிடம் லட்டை வாங்கிக் கொண்டன. இறைமக்களே, இப்பொழுது எந்த விரல் முக்கியமானது? நம் வாழ்வின் பல பெரும் பகைமைகளுக்கு மிக யதார்த்தமான முறையில் பதிலளிக்கிறது இவ்வுவமை. தன்னைச்சிறந்தவராக காட்டிக் கொள்வதில் தவறு இல்லை. அது நமக்கான உரிமை. ஆனால், தான் மட்டுமே சிறந்தவர் என்ற மனோபாவத்தில் தன்னை காண்பிக்க விழைவது பெரும் ஆபத்தில் முடிகிறது. `நான்..! நான்..! நான்..!’ என்ற பெருமையும், சுயநலமும், கர்வமும் நாளடைவில் மிருகமாகவே மாற்றிவிடும். ஆகவேதான் இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடர் பேதுரு தனது நிருபத்தில் கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறார்.

‘‘இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக் கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’’ (1 பேதுரு 5:5) தேவன். மனிதனுக்கும், மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது ‘‘நான்’’ என்னும் அகங்காரம் மட்டுமே. எங்கெல்லாம் உறவு முறை கெடுகிறதோ, அங்கேயெல்லாம் மறைந்திருந்து தாக்குவது ‘‘நானும் எனதுமே’’. இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நமக்கு ஏன் இந்த தலைக்கனம்? நாம் பூரண நிலையை அடைய விரும்பினால், நான் என்னும் அகந்தையை முழுமையாக அகற்றி விடுவதே காலச்சிறந்தது.
– அருள்முனைவர். பெவிஸ்டன்.

 

The post நான் என்னும் அகங்காரம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...