×

இந்த வார விசேஷங்கள்

சஷ்டி 31.3.2024 – ஞாயிறு

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச் சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. இதற்குப் பொருள், சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது. சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு. சூரியனுக்கு உரிய கிழமை ஞாயிற்றுக்கிழமை அன்று சஷ்டி வருவது விசேஷம். சஷ்டி என்பது ஆறாவது திதி. ஆறு என்பது பகை மற்றும் கடன்களை நீக்குவது. நல்ல உத்தியோகத்தைத் தருவது. அதுவும் இன்றைய தினம் கேட்டை நட்சத்திரமும் தொடர்ந்து மூல நட்சத்திரம் இருக்கிறது. ஞானம் தரும் இந்த உயர்ந்த நட்சத்திரத்தில் சஷ்டி விரதம் இருந்து அனைத்து நலன்களும் பெறுவோம். கந்த சஷ்டி பாராயணம் மற்றும் திருப்புகழ் பாராயணம் மிகச்சிறந்த நன்மையைத் தரும். இன்று சொல்ல வேண்டிய கந்தர்
அந்தாதித் பாடல்
“தெளிதரு முத்தமிழ் வேதத்தில் தெய்வப் பலகையின் கீழ்
தெளி தரு முந்து அமிழாநித்தர் செவித்து நின்றதென்? நாள்
தெளி தரு முத்து அமிழ்து ஏய் நகை வாசக, செல்வி தினை
தெளி தரு முத்து அமிழ் செவ்வேள் இருப்ப செவி குனித்தே’’.
முத்துப் போன்ற பல்லும் அமிர்தம் போன்ற சொல்லும் உடைய, தினை வனத்தில் வளர்ந்த வள்ளி கொடுத்த முத்தத்தில் உருகி நிற்கும் முருகப்பெருமான் உபதேசம் செய்தபோது எல்லாவற்றிலும் முதன்மை ஸ்தானம் வகிக்கும் சிவபெருமான் பணிவுடன் கேட்டு நின்றது என்ன காரணம்? என்பது அருணகிரிநாதர் அருளிய இந்தப் பாட்டின் பொருள்.

திருக்குறுங்குடி ரதம்
1.4.2024 – திங்கள்

திருக்குறுங்குடி அற்புதமான தலம். திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்). ஸ்ரீபாஷ்யகாரராம் ராமானுஜர்,இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு.

அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அந்த இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது. பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத் திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர். இத்தனைச் சிறப்பு பெற்ற திருக்குறுங் குடியில் பங்குனி பிரம்மோற்சவம் மிகப்பெரிய உற்சவம். அதில் இன்றைய தினம் திருத்தேர்.

ராமேஸ்வரம் பதஞ்சலி
சித்தர் குரு பூஜை
1.4.2024 – திங்கள்

தமிழ் சித்த (சைவ) பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர். பதஞ்சலி புகழ்பெற்ற யோக குருவான நந்திதேவாவிடம் (சிவபெருமானின் தெய்வீக காளை) யோகா மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். சிவபெருமானால் தொடங்கப்பட்ட 18 யோக சித்தர்களில் நந்தியும் ஒருவர். நந்திதேவரின் சீடர்களில் பதஞ்சலி,தட்சிணாமூர்த்தி, திருமூலர், ரோமரிஷி, சட்டைமுனி ஆகியோர் அடங்குவர். அவர் ஜீவா சராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜைநடக்கிறது.

ஸ்ரீ பெரும்புதூர் மணவாள
மாமுனிகள் புறப்பாடு
1.4.2024 – திங்கள்

ஸ்ரீராமானுஜரின் புனர் அவதாரமாகக் கருதப்படுபவர் ஸ்ரீ மத் மணவாள மாமுனிகள். அவருடைய அவதார நட்சத்திரமான மூல நட்சத்திரம் எல்லா வைணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படும். அந்த வகையில் ஸ்ரீ ராமானுஜர் அவதார ஸ்தலமான ஸ்ரீ பெரும்புதூரில் மணவாள மாமுனிகளின் திருநட்சத்திர புறப்பாடு இன்று விமர்சையாக நடைபெறும்.

மன்னார்குடி ராஜா
அலங்காரம் புஷ்ப பல்லக்கு
2.4.2024 – செவ்வாய்

தமிழகத்தின் பிரசித்திபெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சாமி கோயில் பங்குனி பெருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சியான முறையில் நடைபெறுவது வழக்கம். பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றிவிழாவும் நடந்து கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும்பங்குனிப் பெருவிழாவில் நாள் தோறும் பலவிதமான வாகனங்களில் ராஜகோபால சாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். இன்று காலை பல்லக்கிலும், மாலை ராஜா அலங்காரம் புஷ்ப பல்லக்கிலும் வீதி வலம் வருவார்.

திரியம்பகஷ்டமி
2.4.2024 – செவ்வாய்

அஷ்டமி என்பது எட்டாவது திதி. அது வைணவத்தில் கண்ணனுக்கு உரியது. சைவத்தில் சிவபெருமானுக்கு உரியது. குறிப்பாக கால பைரவருக்கு உரியது. சக்தி வழிபாட்டில் துர்க்கைக்கு உரியது. எனவே எல்லோரும் அனுசரிக்கக்கூடிய விரத நாள் அஷ்டமி. இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை பங்குனி மாதம் வருகின்ற அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இன்று காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் அஷ்டமி விரத நன்மைகள் ஏற்படும் திருமணத் தடைவிலகும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

கரிவலம் வந்த நல்லூர்
பால்வண்ணநாதர் விழா
3.4.2024 – புதன்

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோயில், கரிவலம் வந்த பால்வண்ணநாதர் கோயில். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இந்தத் தலம் நெருப்புத் தலம் என்ற பெருமை உடையது. இந்திரனின் வாகனமாகிய யானை (கரி) இக்கோயிலை வலம் வந்து வணங்கியதால் கரிவலம்வந்தநல்லூர். சங்கரன்கோவிலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இறைவன் பால்வண்ண நாதர். இறைவி ஸ்ரீ ஒப்பனை அம்மாள். அகஸ்தியர் ஏற்படுத்திய ஸ்ரீ ஆதிசக்தி பீடம் இங்கு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் பெரு உற்சவம் இக்கோயிலில் இன்று தொடங்குகிறது.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன்
3.4.2024 – புதன்

நாம் திருமலைக்கு பெருமாளை பார்க்கச் சென்றிருப்போம். அங்கே விடிகாலையில் ஒலிக்கக்கூடிய சுப்ரபாதத்தைக் கேட்டிருப்போம். ‘‘கௌசல்யா சுப்ரஜா’’ என்று தொடங்கும் அந்த சுப்ரபாதம் நம் காதுகளில் இனிமையாக ஒலிக்கும். அந்த பாடலை இயற்றியவர் யார் தெரியுமா? அவர்தான் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். இவர் வைணவ சமய குருவும், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி அறிஞரும் ஆவார். பிரதிவாதி பயங்கரம் அண்ணன், கி.பி. 13610-ல் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஹஸ்திகிரிநாதர் ஆகும். மணவாளமாமுனிகளின் நேரடிச் சீடராக இருந்தவர். மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் (மாமுனிகளின் எட்டு முக்கிய சிஷ்யர்கள்) ஒருவருமாவார் வைண சமயத்தை வளர்ப்பதற்காக ராமானுசர் நியமித்த 74 சிம்மாசனாதிகளில் ஒருவரான முடும்பை நம்பியின் வழித்தோன்றலில் பிறந்தவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். அவர் அவதார நட்சத்திரம் இன்று.

திருவோணம்
4.4.2024 – வியாழன்

இன்று வியாழன். குருவுக்கு உரிய நாள். எந்த புண்ணிய பலனும் மாறாது கொடுக்கும் நாள். வியாழக்கிழமையும் திருவோணமும் கலந்து வந்தால், அந்த நாளுக்கு ஒரு மகத்தான சிறப்பு உண்டு. அப்படி மகத்தான சிறப்பு பெற்ற நாள் இன்றைய நாள். குறிப்பாக ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத்திற்கு கிரிவலம் போல, பிரதட்சணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால், ‘‘திரு’’ என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும். திங்கட்கிழமையும் திருவோணமும் சேர்ந்த தினங்களாக ஆண்டிற்கு ஓரிரு தினங்கள் வரும். இந்த தினத்தில் விரதம் இருந்து அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும். முதல்நாள் இரவு திட உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்துக்கு சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அழகான குழந்தை பாக்கியம் கிட்டும்.

ஏகாதசி
5.4.2024 – வெள்ளி

பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம். மேலும், பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது? என்று ஸ்ரீ ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீ ராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sashti ,Sashti Vratham ,vrathams ,Lord ,Murugan ,Shashti ,
× RELATED தமிழ்ப்புத்தாண்டில் சிவன்மலை முருகன்...