×

நுழைவுத்தேர்வு என்ற பெயரில் படித்தவனை படிக்காதவன் ஆக்கும் அரசு தேவையா?

*ஈரோடு தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கேள்வி

ஈரோடு : காலை உணவு தந்து கல்வி தரும் அரசு வேண்டுமா? அல்லது நுழைவுத்தேர்வு மூலம் படித்தவனையும் படிக்காதவன் ஆக்கும் அரசு தேவையா? என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் வெப்படை ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வீரப்பன்சத்திரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:

எல்லா கட்சி வேறுபாடுகளையும் மறந்து நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழ்நாடு காக்கும் வியூகம். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத்திட்டம் என்பது காமராஜர் தொடங்கி எம்ஜிஆர் அதை தொடர்ந்து, இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதல்வரால் நிகழ்த்தப்படுகின்றது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது ஆண்டாண்டுகாலமாக நம்மைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் புகழ். நாமும் ஏற்றுக்கொண்ட பொறுப்பு, கடமை. ஒன்றிய பிரதமர் தமிழகம் வரும்போது, மழலை தமிழில் இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளைப் பேசுவார். தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிட கூட்டம் இது என்று அங்கே பேசிக்கொள்கிறார்கள். வடநாட்டில் கட்டபொம்மன், வஉசிதம்பரனார், காமராஜர் என்று யாராவது பெயர் வைத்து இருக்கிறார்களா?

ஆனால் நம் மாநிலத்தில் காந்தி, நேரு, போஸ், படேல் என பலருக்கும் பெயர் வைத்துள்ளோம். நீங்கள் இப்போதுதான் படேலுக்கு சிலை எழுப்பினீர்கள். நாங்கள் எங்கள் இதயத்தில் எப்பவோ படேலுக்கு சிலை எழுப்பி விட்டோம். தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய். எங்கள் பெயரைக் கேட்டாலே அது தெரியும். இங்குள்ள ஒரு அமைச்சர் பெயர் நேரு. இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும்? எப்படியாவது இந்த நாட்டை பிடிக்க வேண்டும் என்பது வெறி.

நாடு காப்பது என்பது வீரம். பத்திரிக்கையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? அது அவருக்கு புரியுமா?. எதுவாக இருந்தாலும் பளிச்சின்னு போட்டு உடைக்க வேண்டும் என்பது இந்த ஊர்க்காரர் சொல்லிக் கொடுத்தது தான். உண்மை எனும் போது தைரியமாக, பயப்படாமல் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி வந்து நம்மை சுரண்டிவிட்டு சென்று விட்டனர்.

நாம் இங்கே காலை உணவு, மதிய உணவு போட்டு குழந்தைகளை வரவழைத்து கல்வி கற்க வைக்கும்போது, எங்கே நம் பிள்ளைகள் படித்து முன்னேறி விடுவார்களோ என்று அவர்கள் எழுத முடியாத தேர்வுகளை எல்லாம் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கொடுக்க வேண்டிய பாக்கியைக் கேட்டால் கொடுத்ததே பிச்சைதானே என்று சொல்லும் ஒன்றிய அரசு. தொடர்ச்சியாக அவர்கள் சொல்லி வரும் பொய்களை நினைவுபடுத்தினாலே போதும். இங்கு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டை நேசிக்கிறேன் என்று சொல்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்று கொண்டு வருகிறார்கள். வேறு நாட்டில் இன்னல்களுக்கு உள்ளாகும், ஈழ போரினால் துன்பங்களை அனுபவிக்கும் தமிழர்களுக்கு இந்த சட்டத்தில் இடம் கிடையாது. இது ஓரவஞ்சனை திட்டம். இவர்களுக்கு நாற்காலி வெறிதான் உள்ளது.

எல்லா இடங்களிலும் நாற்காலி போட்டு உட்கார வேண்டும் என விரும்புகின்றனர். எங்களுக்கான நலத்திட்டங்களுக்கு கையெழுத்து போடத்தான் நாற்காலி. உங்கள் குரல் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். அதற்கு திமுக வேட்பாளரை அனுப்பி வைக்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர். கருப்புப்பணம் ஒழிப்பு என்று ஒரு வடை சுட்டார்கள். அந்த வடை வாயால் சுட்ட வடை. கருப்பு பண முதலைகளை பிடிப்பேன் என்று சொன்னவர்கள், மீன்களைப் போன்ற மக்களைக் கொன்று விட்டனர். அரசியலும் மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போய்விடும் என்பதற்கு ஐரோப்பா கண்டம் பெரிய உதாரணம்.

காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத்திட்டங்களை என் சகோதரர் செயல்படுத்துகிறார். இந்த திட்டத்தை ஏன் வடநாட்டில் செய்யவில்லை. 29 பைசாவை வைத்து நாங்கள் இதை செய்யும் போது, 7 ரூபாய் வைத்து ஏன் பீகாரில் செய்ய முடியவில்லை. அதை விட்டுவிட்டு, எங்களை கிண்டல் அடிக்காதீர்கள். 29 பைசாவை எப்படி 20 பைசா ஆக்கலாம் என்று யோசிக்காதீர்கள். காலை உணவு தந்து கல்வி தரும் அரசு வேண்டுமா அல்லது நுழைவுத்தேர்வு மூலம் படித்தவனையும் படிக்காதவர் ஆக்கும் அரசு தேவையா?.

மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் அரசு தேவையா? பில்கீஸ் பானு குற்றவாளிகளை வெளியில் விடும் அரசு தேவையா – விவசாயிகளை காக்கும் அரசு வேண்டுமா? அவர்கள் மீது போர் தொடுக்கும் அரசு வேண்டுமா, தொழில்களை ஊக்கப்படுத்தும் அரசு வேண்டுமா – ஜிஎஸ்டி போட்டு சிறுகுறு வியாபாரிகளை நெருக்கும் அரசு வேண்டுமா?, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் அரசு வேண்டுமா? – ஜனாதிபதியாக இருந்தாலும் வெளியில் நிற்க வைக்கும் கோயில் நடத்தும் அந்த அரசு வேண்டுமா. நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நுழைவுத்தேர்வு என்ற பெயரில் படித்தவனை படிக்காதவன் ஆக்கும் அரசு தேவையா? appeared first on Dinakaran.

Tags : Kamalhassan ,Erode ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்