×

பன்னர்கட்டா வன உயிரியல் பூங்காவிற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த பபூன் வகை குரங்குகள்

*ஒரு மாதம் தனிமை படுத்த முடிவு

ஓசூர் : சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா வன உயிரியல் பூங்காவிற்கு 6 பபூன் வகை குரங்குகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த குரங்குகள் ஒரு மாத காலம் தனிமை படுத்தப்பட்டு பின்னர், சகஜ நிலைக்கு வந்த பின்னர், சுற்றுலா பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகரில் உள்ள பன்னர்கட்டா வன உயிரியல் பூங்காவில் யானை, கரடி, மான், முயல், மயில், வரிக்குதிரை, காண்டாமிருகம், புலி, சிங்கம் என பல வகை விலங்குகள், பறவை இனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவுக்கு வந்துசெல்கின்றனர். சமீபத்தில் இங்குள்ள யானை குட்டி போட்டது. அதை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக சிங்கப்பூரில் இருந்து பபூன் வகை குரங்குகள் கொண்டுவர முடிவு செய்தனர். இதையடுத்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 பபூன் குரங்குகள் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இரண்டு ஆண் மற்றும் 4 பெண் ஹமடிரியூஸ் என்னும் பபூன் குரங்குகள், பன்னர்கட்டா பூங்காவிற்கு வந்துள்ளன.
இவை சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு உள்ளன. டெல்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒப்புதலுடன் விலங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விமானம் மூலம் பெங்களூரு வந்த இந்த பபூன் வகை குரங்குகள், ஒரு மாத காலம் தனிமை படுத்தப்படும். இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறும், உணவு பழக்க வழக்கங்களை கற்ற பின்னர், அவை பூங்காவில் திறந்தவௌியில் விடுவிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் இந்த பபூன் வகை குரங்குகளை பார்க்க அனுமதிக்கப்படும் என வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பன்னர்கட்டா வன உயிரியல் பூங்காவிற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த பபூன் வகை குரங்குகள் appeared first on Dinakaran.

Tags : Singapore ,Bannerghatta Forest Zoo ,Bengaluru, Karnataka ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...