×

சசிகலாவின் காலில் எடப்பாடி மீண்டும் சரணாகதி அடைவார்: திமுக பேச்சாளர் நாஞ்சில்சம்பத்

1. கூட்டணி இல்லாமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி என்று சீமான் கூறியுள்ளாரே?
சீமான் எதற்காக தேர்தலில் நிற்கிறார். அதன் நோக்கம் என்ன? அந்த கட்சியை காப்பாற்றுவதோ, கரை சேர்ப்பதோ அவரது நோக்கம் அல்ல?. திமுகவுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய வாக்குகளை சிதறடிப்பது தான் நோக்கம். அவர் யாருக்காகவோ கருவியாக இருக்கிறார். இல்லாவிட்டால் கைக்கூலியாக இருக்கிறார். இந்த நாட்டில் வீழ்த்தப்பட வேண்டிய பாசிசத்தின் ேகார முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி அம்பலப்படுத்துவதற்கு அவரிடத்தில் ஒரு தயக்கம் இருக்கிறது. இன்று தேர்தல் ஆணையத்தின் மீது அவர் ஒரு குற்றச்சாட்டு வைத்தாலும், மோடியின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து அவர் தமிழகத்தில் எந்தவித போராட்டமும் நடத்தவில்லை. திமுகவின் மீது அவதூறுகளை அள்ளி வீசி யாரையோ திருப்திபடுத்த முயற்சிக்கிறார். எனவே தனித்து நிற்போம் என்று அவர் தடாலடியாக பேசுவது ஒரு பிழைப்பு என்றுதான் நான் கருதுகிறேன்.

2. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழகத்தில் எதை நோக்கி போகிறது?
தமிழக ஆளுநர் ஒரு ஆர்எஸ்எஸ் பண்ணையில் வளர்ந்தவர். அந்த அழுகிப் போன சித்தாந்தத்துக்கு உயிர் கொடுப்பதற்கு ஆளுநர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்துகிற ஒரு பாவத்தை அவர் செய்கிறார். திராவிட இயக்கத்தின் மீது தொடர்ந்து கல்லெறிகிறார். ஒரு வெறுப்பு அரசியலை நடைமுறைப்படுத்த துடிக்கின்ற பாஜவுக்கு இன்று ஆளுநர் ஒரு கருவியாக இருப்பது தான் கவலையளிக்கிற விஷயம். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அகிலத்துக்கு கொடுத்தவர் ஜி.யு.போப். அவரை ஒரு கிறிஸ்தவன் என்று கொச்சைப்படுத்தி ஆளுநர் செய்கின்ற பிரசாரம் ஈனத்தனமானது. பிஷப் கால்டுவெல் மீதும் ஒரு சாயத்தை பூசுகிறார். எனவே தமிழ்நாட்டை காவி மயமாக்குவதற்கு அதிகாரத்தில் இருக்கிற பாஜவால் முடியவில்லை. அந்த கடமையை இன்று ஒரு ஆளுநர் செய்வது அபத்தமானது மட்டுமல்ல, அவர் வகிக்கிற பொறுப்புக்கு இது அழகல்ல.

3. மூணாவது மனுஷன் காலிலா விழுந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளாரே?
சசிகலா தனது காலை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் மீண்டும் காலில் விழுவதற்கு அவர் அணியமாகி வருகிறார். சசிகலாவின் தலைமையில் தான் அந்த கட்சியை காப்பாற்ற முடியும் என்று அந்த கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் இன்னும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் இந்த கருத்தை எடப்பாடி சொல்லியிருப்பதன் மூலம், சசிகலாவிடம் சரணாகதி அடைவதற்கு தேர்தல் முடிந்த உடன் அதற்கான பணிகளில் எடப்பாடி ஈடுபடுவார். அதற்கு முன்னோட்டம் தான் இந்த பேச்சு.

4. உங்களது தேர்தல் பிரசாரம் எப்படி பட்டதாக இருக்கும்?
40 எல்லை, தோற்பது இல்லை என்ற வகையில் எனது பிரசாரத்தை அமைத்துக் கொள்வேன். இந்த நாடு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், மதசார்பின்மைக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் இன்றைக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆபத்தை விளைவிக்க அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துகிற பாவத்தை கூச்சமில்லாமல் பாஜ செய்கிறது. 10 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்களுக்கு இன்னது செய்தேன் என்று சொல்ல முடியாதவர்கள் இந்த நாட்டில் மதவாதத்தை மட்டுமே முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மக்கள் ஆதரவு பாஜவுக்கு இல்லை. எனவே இன்றைக்கு பாஜ தீண்டுவார் இல்லாத தின் பண்டமாக, தேடுவார் இல்லாத திரவியமாக இருக்கிறது. அரசியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள பாஜ தடுமாறுகிறது. எனவே, இது ஜனநாயக நாடா, இது ஜனநாயகத்திற்கு அழகா? என்கிற கேள்விகளை வரிசையாக முன்வைத்து யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது எனது தேர்தல் பிரசாரத்தில் எடுத்து வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டை காவி மயமாக்குவதற்கு அதிகாரத்தில் இருக்கிற பாஜவால் முடியவில்லை. அந்த கடமையை இன்று ஒரு ஆளுநர் செய்வது அபத்தமானது மட்டுமல்ல, அவர் வகிக்கிற பொறுப்புக்கு இது அழகல்ல.

The post சசிகலாவின் காலில் எடப்பாடி மீண்டும் சரணாகதி அடைவார்: திமுக பேச்சாளர் நாஞ்சில்சம்பத் appeared first on Dinakaran.

Tags : Sasikala ,DMK ,Nanjilsampath ,Seeman ,
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!