×

பாஜ அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்பாட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள்,காங்கிரஸ் சட்ட பேரவை தலைவர்கள்,பொது செயலாளர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை சட்ட விரோதமாக முடக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்றன. தற்போது ரூ.1823 கோடி அபராதம் செலுத்த கோரி புதிதாக நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. ஏற்கனவே கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை வலுக்கட்டாயமாக எடுத்து வைத்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக கட்சி சார்பில் செலுத்தப்பட்டுள்ள வருமான வரி ரிட்டர்ன்கள் மீண்டும் எடுக்கப்பட்டு சட்ட விரோத முறையில் வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைகள் மீதான நடத்தப்பட்ட அப்பட்டமான தாக்குதல் தவிர வேறொன்றும் இல்லை. இதை கண்டித்து 30ம் தேதி(இன்று) நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெரிய அளவில் ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும். இதை தொடர்ந்து நாளை கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் ஆர்பாட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.

* பாஜவுக்கு அபராதம் கிடையாதா?: கார்கே கேள்வி
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், எதிர்க்கட்சிகளின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறைக்கு யார் அழுத்தம் கொடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை துன்புறுத்துவதற்காக வருமான வரித்துறை பயன்படுத்தப்படுகிறதா? ஜனநாயகத்தை கவிழ்க்கவும், அரசியல் சட்டத்தை சிறுமைப்படுத்தவும் வருமான வரி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது.ரூ.1823 கோடி அபராதம் செலுத்தும்படி காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கட்சி நிதியில் இருந்து ரூ.135 கோடி பணத்தை வருமான வரித்துறை எடுத்துள்ளது. ஆனால் பாஜவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் 2017-18ம் ஆண்டில் 42 பேர் பாஜவுக்கு ரூ.1297 கோடி நன்கொடை அளித்ததுள்ளனர் என தெரியவந்துள்ளது. ரூ.14 லட்சம் வைப்பு தொகைக்காக காங்கிரசுக்கு ரூ.135 கோடி அபராதம் விதித்து வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் பாஜவுக்கு ரூ.4,600 கோடி கிடைத்துள்ளது. பாஜவுக்கு மட்டும் அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post பாஜ அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP government ,New Delhi ,General Secretary ,KC Venugopal ,Congress Legislature ,Congress party ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...