×

லக்னோ – பஞ்சாப் இன்று மோதல்

லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. வாஜ்பாய் அரங்கில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி நடப்புத் தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் களம் காண உள்ளது. ராஜஸ்தானிடம் தோற்ற முதல் ஆட்டத்தில், லக்னோ கேப்டன் ராகுல், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாகவும், க்ருணால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் பரவாயில்லை ரகத்திலும் விளையாடினர். அந்த போட்டியில் 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், இன்று வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் லக்னோ இருக்கிறது.

ஏறக்குறைய அதே நிலைமையில் தான் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் உள்ளது. சொந்த ஊரில் நடந்த முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். ஆனால், பெங்களூருவில் விளையாடிய 2வது ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் அதே 4 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. 2 போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் அடுத்த வெற்றி அவசியம். அதற்கு அதிரடி வீரர்கள் சாம் கரன், ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லயம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் கவுர், காகிசோ ரபாடா ஆகியோரும் சிறப்பாக பங்களித்தால் மட்டுமே லக்னோவை கட்டுப்படுத்த முடிடியும். இரு அணிகளும் வெற்றி முனைப்பில் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

நேருக்கு நேர்
* லக்னோ – பஞ்சாப் 3 முறை மோதியுள்ளதில் லக்னோ 2-1 என முன்னிலை வகிக்கிறது.
* அதிகபட்சமாக லக்னோ 257 ரன், பஞ்சாப் 201 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக லக்னோ 159 ரன், பஞ்சாப் 133 ரன் எடுத்துள்ளன.
* இந்த 2 அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஐபிஎல் ஆட்டங்களில் லக்னோ 3-2 என்ற கணக்கிலும், பஞ்சாப் 2-3 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன.

The post லக்னோ – பஞ்சாப் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Punjab ,IPL ,Lucknow Supergiants ,Punjab Kings ,Vajpayee Arena ,KL Rahul ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ