×

சமூக நீதி பேசும் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜவுடன் கைகோர்த்த மர்மம் என்ன? தர்மபுரி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: சமூகநீதி பேசும் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் கை கோத்த மர்மம் என்ன, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ராமதாசுக்கு மோடி கேரண்டி கொடுத்தாரா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தர்மபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தர்மபுரி தொகுதி வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பா.ஜ. என்பது சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி. சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி. அப்படிப்பட்ட பா.ஜ.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு. ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் அய்யா டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.வுடன் – சமூகநீதி பேசும் அய்யா ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது.

இந்த தர்மபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்கு சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல – அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை. ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றும் அரசை ஒன்றியத்தில் அமைக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை வலுவாக அமைத்திருக்கிறோம். அந்த வகையில், இந்தியா கூட்டணி, மக்களின் நலனுக்காக மக்களுக்காகவே பாடுபடும் கட்சிகளின் கூட்டணியாக கம்பீரமாக உங்களுக்காகக் களத்தில் போராடுகிறோம்.

சமூகநீதி பேசும் மருத்துவர் அய்யா, சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.வுடன் கைகோர்த்த மர்மம் என்ன? பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ. இது, மூத்த தலைவரான மருத்துவர் ஐயாவுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள். அய்யா ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பா.ஜ. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியையே பா.ஜ. கவிழ்த்ததே.

இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பா.ஜ. செய்திருக்கிறது. அதை மறந்துவிட்டாரா? பாமகவின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் அய்யா ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பாமக பாடுபடும் என்று சொல்கிறார்.

நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி அவர்கள் இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? அய்யா ராமதாஸ், மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.

இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாகத் தந்திருக்கிறார். பா.ஜ. தேர்தல் அறிக்கையில் அந்த மாதிரி வாக்குறுதி உண்டா? அருமைச் சகோதரர் ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசுகிறாரே?.
பத்தாண்டுகளாகச் சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைக்கப்படும்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும். விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் – வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் பிளஸ் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும். நாட்டைப் பாதுக்காத்த இந்திய ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் பிற நிதிப் பலன்கள் உயர்த்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும். மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து, அதை எதிர்த்த விவசாயிகளை ஏதோ தீவிரவாதிகளைப்போல் எப்படி கொடுமைப்படுத்தினீர்கள்? இன்றைக்கும் தலைநகர் தில்லியில் விவசாயிகளை நுழைய விடாமல் சாலை முழுவதும் ஆணி அடித்தீர்களே. விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் கொடுமை மாதிரி, இந்திய வரலாற்றிலேயே எந்தப் பிரதமரும் செய்திருக்க மாட்டார்கள்… ஏன், உலக வரலாற்றில்கூட, எந்த சர்வாதிகாரியும் செய்திருக்க மாட்டார்கள்!

கார்ப்பரேட்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, இரத்தம் சிந்தி உழைக்கும் ஏழைகளுக்கு, உதவியாக இருக்கும் திட்டத்தை சீரழித்து வேடிக்கை பார்த்தது. நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் பார்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 294 ரூபாயிலிருந்து, 319 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்! அடேங்கப்பா, மக்கள் மேல் எவ்வளவு அக்கறை! அவ்வளவு அக்கறை இருக்கிறவர், இதையெல்லாம் தேர்தலுக்கு முன்னால் ஏன் செய்யவில்லை? ஏன் என்றால், இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்!

திரும்பவும் நாங்கள் உறுதியோடு சொல்கிறோம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், வேலைவாய்ப்பு நாட்களை, 150 நாட்களாக உயர்த்தி, ஊதியத்தையும் 400 ரூபாயாக உயர்த்துவோம். நேற்று ஒரு செய்தி பார்த்தேன். நம்முடைய மக்களுக்கு வெள்ள பாதிப்பின்போது, நிவாரணம் கொடுத்ததைப் பிச்சை என்று சொன்னார்களே, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய செய்தி. இவர்கள் பிச்சை என்று சொன்னதும், நான் என்ன சொன்னேன்? நிர்மலா சீதாராமன் ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள்ஞ் மக்கள் உங்களுக்குச் சொல்லும் பதிலில், ’பிச்சை’ என்ற சொல்லே இனி உங்கள் ஞாபகத்திற்கு வராது என்று சொன்னேன்.

ஆனால், வேட்பாளர் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை. ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட அவரிடம் பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். சொல்வது யார்? சாதாரண மக்களின் பேங்க் பேலன்ஸ் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கிறவர்கள் சொல்கிறார்கள். இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பா.ஜ. வேட்பாளர்கள் நிற்கிறார்களே? அந்தப் பணம் என்ன ஆனது? உங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? யாரைக் குற்றம்சாட்டுகிறார்?

அம்மையார் அவர்களே, தேர்தலில் போட்டியிட மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கத் தெரிய வேண்டும். மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். உங்களுக்கே தெரிந்துவிட்டது, தேர்தலில் நின்றால், மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று, தப்பி விட்டீர்கள். தமிழ்நாட்டு மக்கள் 2019 தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலிலும் பா.ஜ.வை ஒதுக்கத்தான் போகிறார்கள். பா.ஜ.வுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்திருப்பவர்களும், கள்ளக் கூட்டணியாகத் தமிழ்நாட்டிற்கு துரோகமிழைக்கும் பழனிசாமி கூட்டமும் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார். தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம்தான் சூப்பர். தேர்தலில் போட்டியிட பணம் இல்லையாம். இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பா.ஜ. வேட்பாளர்கள் நிற்கிறார்களே, அந்தப் பணம் என்ன ஆனது? உங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? யாரைக் குற்றம்சாட்டுகிறார்?

The post சமூக நீதி பேசும் ராமதாஸ் சமூக நீதிக்கு எதிரான பாஜவுடன் கைகோர்த்த மர்மம் என்ன? தர்மபுரி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Ramdas ,BJP ,Chief Minister ,M.K.Stal ,Dharmapuri ,Chennai ,M.K.Stalin ,Ramadas ,Thadangam ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...