×

ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள்: ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி

தும்கா: ஒரு தலைக்காதலால் மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (17) என்பவரை ஷாரூக் உசேன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார். அவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்தார். ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு, தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். பலத்த தீக்காயமடைந்த அங்கிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருதலைக் காதலன் ஷாரூக் உசேன் மற்றும் அவரது நண்பர் நயீம் அன்சாரி மீது போலீசார் கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் சந்திரா முன் விசாரணகை்கு வந்தது. 51 சாட்சிகள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், 17 வயது சிறுமியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாருக் உசேன், நயீம் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

The post ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள்: ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Jharkhand court ,Dumka ,Ankita Singh ,Jharkhand ,Dumka district ,Shahrukh ,Dinakaran ,
× RELATED சில கிரிமினல்கள் மீது நடவடிக்கை...